பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் * 303 ஆன்மாவின் யாத்திரையில் சமய வாதிகளின் அரற்றல், மாயாவாதம், உலகாயதம் ஆகியவை தடையாக உள்ளன. பெரும்பாலும் கல்வியறிவு உடையவர்களையே இங்குக் கூறிய மூன்றும் தாக்குகின்றன. அதனாலேயே கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும் என்றார். இதுவரைக் கூறிய பகுதிகளில் ஆன்ம யாத்திரையில் அறிவு தொழிற்படும் பகுதிகளே பேசப்பெற்றன. இதற்கு மாறாக அறிவை மடக்கி, அன்பு மீதுர்ந்த நிலையில் இறைவனை அடையும் துடிப்பு அந்த ஆன்மாவிடம் மிகுதிப்படுகின்றது. இங்கு இறைவன் யார், நான் யார், அவன் இயல்பு என்ன, எனக்கும் அவனுக்கும் என்ன தொடர்புபோன்ற அறிவு வாதங்கள் பயன்படுவதில்லை. அதன் மறுதலையாக மனம், சித்தம் ஆகிய இரண்டிலும் அன்பு மீதுார்தலினால் நிகழும் நிகழ்ச்சிகளையும் பேசும் பேச்சுக்களையும் 140 அடிகளில் அடிகளார் பேசுகின்றார். ஏனக் குருளைக்கு அருளினை(165), கருங்குருவிக்கு அன்று அருளினை(209) என்பனபோன்ற பல அடிகள் ஐந்து அறிவுடைய உயிர்கட்கும் அவன் காட்டும் கருணையை விபரிக்கின்றன. இதனிடையே, அந்தக் கருணைக் கடல் தம்மை ஆட் கொள்வதற்காகவே, குருபரனாகித் திருப்பெருந்துறையில் எழுந்தருளியதை விரிவாகப் பேசுகின்றார். கோடிக் கணக்கான மனிதர்களும், தேவர்களும் இருக்கும்போது அவர்களுக்குக் கிட்டாத ஒருவன், அவருள்ளம், புற்றுமாய் மரமாய் புனல் காலே உண்டியாய்'(திருவாச : 23-2) தவமியற்றும் சிலருக்கும் கிட்டாத ஒருவன், நனவில் தம்மைப் பிடித்து ஆட்கொண்டான் என்ற நினைவு தோன்றுவதால் பொதுவான ஆன்ம யாத்திரை பேசும் போற்றித் திருஅகவலில் இடையிடையே தமக்கு நிகழ்ந்த அற்புதத்தையும் குறிக்கின்றார்.