பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை இந்தத் தலைப்பே பலருக்கு வியப்பை உண்டாக்கலாம். எனக்குத் தெரிந்தவரை, இதுவரை வெளிவந்துள்ள எந்த நூலிலும் பின்னுரை என்ற தலைப்பில் நூலின் இறுதியில் யாரும் எழுதியதும் இல்லை; வெளிவந்ததும் இல்லை. நீண்ட யோசனைக்குப் பின்பே சில கருத்துக்களை வெளியிட இத் தலைப்பே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து இதனை எழுதுகிறேன். திருவாசகத்தின் முற்பகுதியில் காணப்பெறும் இந்த நான்கு அகவல்களுக்கும், பின்னர் வரும் நூல் முழுவதற்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. அடிகளாருடைய மாபெருங் கல்விப் பெருக்கம், மெய்ஞ்ஞானத்தோடு சேர்ந்த விஞ்ஞான அறிவு, எத்தகைய துண்மையான கருத்தையும் எளிமையான சில சொற்களைக்கொண்டு வெளியிடும் ஆற்றல் என்பவை. இந்த அகவல்களில் மட்டுமே காணப்பெறும் சிறப்பாகும். அன்பும் பக்தியும் நிறைந்த ஓர் ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் தத்துவ ஆராய்ச்சி பற்றியும், உயிர்களின் வளர்ச்சிமுறைபற்றியும் பல சிறந்த விஞ்ஞான முடிவுகளை இந்த அகவல்களில் அவர் வெளியிட்டுள்ளார். முதலாவதாக உள்ள அகவல் சிவபுராணம் என்ற பெயரில் அமைந்துள்ளது. அந்த அகவலின் முதற் பதினைந்து அடிகள் இறைவனது திருவடிப் பெருமையைப் பேசுகின்றன. நான்காவதாகவுள்ள போற்றித் திருஅகவலில் நூறடிகளுக்குமேல் போற்றி என்ற சொல்லுடன் முடிகின்றன. திருவடிப் பெருமையை உய்த்துணர்கின்ற ஆன்மா, அதுபற்றிய ஆராய்ச்சியில் இறங்காமல் அத் திருவடிகளில் சரணம் புகுவதே சிறந்தவழி என்பதை