பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 திருவாசகம் - சில சிந்தனைகள் அடிகளார் கூறியுள்ளார் என்ற முடிவிற்கு வருவதில் தவறில்லை. சிவபுராணத்தின் முற்பகுதியிலும், திரு அண்டப் பகுதியின் முற்பகுதியிலும் மனிதனுடைய அறிவு, கற்பனை என்பவற்றைக் கடந்து நிற்கும் இறைவனது பெருமை பேசப்படுகின்றது. சிவபுராணத்தின் முதல் அடியேகூட இறைவன் ஐந்தெழுத்தின் ஒலிவடிவாக உள்ளான் என்று தொடங்குகிறது. மூன்றாவதாக உள்ள திரு அண்டப்பகுதி, நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்து கொண்டிருக்கும் இப் பேரண்டம் இறைவனுடைய வடிவத்துடன் ஒப்புநோக்கில் ஒரு துகளைவிடச் சிறியது என்று சொல்லும்படியாக, அவன் பெரியவனாக உள்ளான் என்று பேசுகிறது. ஒலி வடிவு என்று கூறிய உடன் தேர்ந்த சிந்தனையாளர்கள்கூட அதனை எண்ணிப் பார்க்க முடியாது. ஆகவே நாம ரூபம் அற்ற அந்தப் பொருளுக்குத் திரு அண்டப்பகுதியில் ஒரு பெருவடிவைக் கற்பிக்கின்றார் அடிகளார். சிவபுராணம், திரு அண்டப்பகுதி என்ற இரண்டு அகவல்களுக்கு இடையே கீர்த்தித் திருஅகவல் என்ற பெயருடன் ஒரு பகுதி உள்ளது. 146 அடிகளையுடைய அந்த அகவலில் 16 அடிகளில் இறைவன்பற்றிய பல கதைகள் பேசப் பெறுகின்றன. இவற்றிலும் ஒரு சிறப்புண்டு. இங்கு கூறப் பெற்ற பல கதைகள் இன்று நமக்கு விளங்காவிட்டாலும் உயிர்கள்மாட்டுக் கொண்ட கருணையால் எங்கோ உள்ள பரம்பொருள் இங்கு வந்து பல திருவிளையாடல்களைப் புரிந்தது என்ற வகையில் பேசப்பெற்றுள்ளன. ஒலிவடிவாக உள்ளான் என்றும் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டுள்ளான் என்றும் சிவபுராணத்தில் பேசுகின்ற அடிகளார், கீர்த்தித் திருஅகவலில் கூறும் கதைகளில்