பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 திருவாசகம் - சில சிந்தனைகள் பல்வேறு வடிவங்கள் என்பதை உணரத் தொடங்கினான். அதனையே அடிகளார், 'பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், வெளி யிடை ஒன்றாய் விளைந்தாய்’ என்று பேசுகின்றார். இவற்றை எல்லாம் நன்கு அறிந்த பின்னரும், மனிதனின் அறிவு வளர்ந்ததே தவிர மனத்தில் அமைதி ஏற்படவில்லை. தெய்வத்தை எப்பொழுது அவன் தொழத் தொடங்கினாலும் தான் என்ற அகங்காரமும், இத் திருக்கோயில் முதலியவை தனது என்ற மமகாரமும் அவனைவிட்டு நீங்கவில்லை. அவன் தொழுகை, பூசனை முதலிய அனைத்திலும் நான், எனது' என்ற இரண்டும் தலைதுாக்கி நிற்பதை உணர்ந்தான். இறைவன் திருவடிகளில் சரணமடைய வேண்டும் என்று நினைக்கும் அதே நேரத்தில், அவனுடைய மனமும் பொறிகளும் எங்கோ செல்வதைக் கண்டான். ஒரு தருமசங்கட நிலை ஏற்பட்டுவிட்டது. மனமும் பொறிகளும் அடங்கவேண்டுமானால் இறைவனிடம் சரணம் அடைவது தவிர வேறு வழியில்லை. அவனிடம் சரணம் அடைய வேண்டுமானால் மனம், பொறி புலன்கள் அடங்க வேண்டும். இந்தப் போரட்டநிலை பல காலம் நீடித்த பின்னர் இறைவனைத் தொழுவதற்குக்கூட அவன் அருள் தேவை என்ற பேருண்மையை உணரத் தலைப்பட்டான். அதனையே அடிகளார், 'அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ என்று கூறுகின்றார். 'இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் என்றும் தில்லை மூதூர் ஆடிய திருவடி, பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி’ என்றும் அடிகளார் குறித்து உள்ளாரே. அஃது உண்மையானால், அதாவது அவன் என்னுள் இருப்பது உண்மையானால் இந்தப் போராட்டம் ஏன் நிகழ்கின்றது? அவனும் உள்ளே இருக்கிறான்; இந்த