பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 - திருவாசகம் - சில சிந்தனைகள் தத்தம் மனத்தில் தோன்றியபடி இவற்றை வரிசைப் படுத்தினர். அடிகளார் வரலாற்றைத் தனியே கூறவந்த 'திருவாதவூரடிகள் புராணமும் இதற்கு விதிவிலக்கன்று. குருநாதர் சில நாட்கள் அடிகளாருடன் தங்கினார் என்றும், திருவடி தீட்சைக்கு முன் அடிகளார் நைவேத்தியம் செய்து குருநாதருக்குப் படைத்தார் என்றும் அப்புராணம் கூறுவது சரியாகப் படவில்லை. என்னுடைய சிந்தனைப்படி இந்தக் கதைகள் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குருநாதர் வந்ததும், அடிகளாருக்குத் தீட்சை அருளி மறைந்ததும் சில நாழிகைப் பொழுதில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். இதுதான் சரி என்று நான் சொல்லவில்லை என்றாலும் இவ்வாறு நினைப்பதும் ஒருவகை என்று கூறுவதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த அடிகளார், பாண்டி நாடே பழம்பதியாகக் கொண்ட பெருமானைப்பற்றி கூறவரும்போது ஒர் அற்புதத்தைச் செய்கின்றார். ஒலிதரு கயிலை உயர் கிழவோனாகிய இறைவன், ஈண்டிய அடியவரோடும் பொலிதரு புலியூர் புக்கு இனிதருளினன் என்று கூறுகின்றார். அதாவது கயிலையில் உறைகின்ற பெருமான் குறிப்பிட்ட காரியத்திற்காக ஈண்டிய அடியவர்களோடு திருப் பெருந்துறைக்கு வந்து அச்செயலை முடித்துவிட்டு அடிகளாரையும் பொதுவினில் வருக என ஆணை இட்டுவிட்டுப் பொலிதரு புலியூர் புக்கனன். சைவமும் சிவபெருமானும் தென்னாட்டில் குப்பிக்குள் அடைக்கப் பெறுகின்ற ஒன்று என்று கருதாமல் பரதகண்டம் முழுவதும் பரந்து கிடக்கின்ற நிலப்பகுதி முழுவதிலும் இறைவன் நிறைந்துள்ளான் என்ற கருத்தை அடிகளாரின் இம் மூன்று அடிகளும் வலியுறுத்துகின்றன. . .