பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 திருவாசகம் - சில சிந்தனைகள் அடிகளார் அறுவகைச் சமயத்தோர்க்கும் என்று மட்டும் கூறாமல், 'அறுவகைச் சமயத்து அறுவகையோர்க் கும்’ என்று கூறியுள்ளார். ஆறுவகைச் சமயங்களையும் சேர்ந்த ஆறுவகைப்பட்டவர்கள் என்று பொருள்கொள்வது எளிதாக இருப்பினும், அது பொருந்தாமை அறிதல் வேண்டும். இதுவே பொருளாக இருந்திருப்பின் அறு வகைச் சமயத்தோர்க்கும்’ என்றுமட்டும் கூறியிருப்பார். அறுவகைச் சமயத்து அறுவகையோர் என்றதனால் ஒவ்வொரு சமயத்திலும் பல பிரிவினர்(வகையோர்) உண்டு என்பதை அடிகளார் குறிப்பால் உணர்த்துகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. உதாரணமாகச் சைவ சமயம் என்று எடுத்துக் கொண்டாற்கூட, காபாலிகர், காளாமுகர், பாசாண்ட சைவர், மாவிரதியர்போன்ற உட்பிரிவினர் நாவரசர் காலத்திலேயே இருந்துள்ளனர் என்பதை அறிதல் வேண்டும். இவர்கள்போன்ற உட்பிரிவினரை அடிகளார் குறிப்பிடுகிறாரோ என்றும் ஐயுறத் தோன்றுகிறது. எவ்வாறு சிந்தித்தாலும் இதிலுள்ள குழப்பம் தீருவதாகத் தெரியவில்லை. கீழே கொடுக்கப்பெறும் மூன்று அடிகளும், மறுபடியும் குழப்பத்தை விளைவிப்பனவாகவே உள்ளன. முறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு அத் தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும் - (திருவாச3-130-133) வேதத்தில் எவ்விடத்திலும் ருத்ரன் என்ற பெயர் தவிரச் சிவபெருமான்பற்றிய குறிப்பு இல்லை; உபநிடதங்களிலும்(ஸ்வேதாஸ்வதர உபநிடதம் தவிர) சிவன்பற்றிய குறிப்பு இல்லை என்பவை எல்லாம் இப்பகுதியின் விளக்கத்தில் முன்னரே குறிப்பிடப் பெற்றுள்ளன. அடுத்த இரு அடிகளுக்குப் பொருள்கூறும் சைவப் பெருமக்கள் சிவாகமங்கள் தவிர ஏனைய