பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 திருவாசகம் - சில சிந்தனைகள் பரா அமுது ஆக்கினன் என்பதால் திருவாசகத்தைப் பாடும் பணி கொடுக்கப்பட்டது என்று உணர்கின்றார் அடிகளார். அத்தகைய நூலைத்தானும் தன் அறிவு கொண்டோ, புலமைகொண்டோ பாடாமல், அவனுடைய அருளையே துணையாகக்கொண்டு தாம் ஒரு கருவியாக மட்டும் நின்று, பாடவேண்டுமென்று நினைக்கின்றார். என்னில் கருணை வான்தேன் கலந்துவிட்ட காரணத்தால் பாடுதலாகிய தொழிலுக்குமட்டும் திருவாதவூரராகிய தாம் கருவி என்று நினைக்கின்றார். தம்மில் கலந்துவிட்ட கருணை வான்தேன் திருவாசகப் பாடல்களாகத் தம்மூலம் வெளிவரப் போகின்றது என்பதை உணர்ந்த அடிகளார், அது உறுதி என்பதால் எதிர் காலத்திற்குப் பதிலாக 'பரா அமுது ஆக்கினன்' என இறந்தகால வாய்பாட்டாற். கூறினார். தம்மை இங்கு விட்டுவிட்டுக் குருநாதர் மறைந்த காரணம் தமது தகுதியின்மை கருதியோ என்று தோன்றிய வருத்தம், இன்ன காரணத்திற்காகத்தான் விட்டுப்போனார் என்ற உணர்வு வந்தவுடன் மறைந்துவிடுகிறது. அதனாலேயே, என்னை ஈங்கு ஒழித்தருளி என்று கூறாமல் 'ஏல (நடைபெற வேண்டிய செயலுக்குப் பொருத்தமாக) என்னை ஈங்கு ஒழித்து அருளி (திருவாச 2-124) என்று பாடுகிறார். இந்த அமைதி கிட்டியவுடன், குருவின் திருவடி பட்டபோது ஏற்பட்ட அனுபவத்தை இப்போது அமைதியாக இருந்துகொண்டு சிந்திக்கின்றார். அனுபவத்தில் மூழ்கி இருக்கும்பொழுது அதுபற்றிச் சித்திக்கவோ, நினைக்கவோ, எடுத்துச்சொல்லவோ முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், பின்னர் வெளிவரப்போகின்ற திருவாசகம் இந்த அனுபவத்தின் பிழிவாகவே இருக்கப்போகிறது. ஆதலால்