பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 திருவாசகம் - சில சிந்தனைகள் உள்ளத்தில் (சித்தத்தில்) உருக்கம் ஏற்படும்போது தோன்றும் இவ்வெளிப்பாடுகள் மிகமிக ஆழமானவை; பிறரை ஈர்க்கும் இயல்புடையவை; நிலையானவை. குருநாதர் வழங்கிய இறை அனுபவ ஆனந்தத்தை அனுபவித்தது அடிகளாரின் சித்தம்மட்டுமா? இல்லை, உடல் முழுவதும் அனுபவித்தது என்கிறார் அடிகளார். அது எப்படி முடியும். கை, கால், எலும்பு, தசை, நரம்பு என்பவை எப்படி உள்ளத்தைப்போல் உருகமுடியும்? இந்தப் பிரச்சனையைத் தீர்க்க மிக அழகாக விடை கூறுகிறார் அடிகளார். உருகுகின்றதாகிய உள்ளம் உடம்பினுள் எங்கோ ஒரு பகுதியில் மறைந்திருந்ததை எடுத்து அதையே ஒரு உருவாகச் செய்துவிட்டார் குருநாதர். உடம்பினுள் மறைந்துநிற்கும்போது இந்த உள்ளம் உருகிற்று அல்லவா? உருகுதலே உள்ளத்தின் இயல்பு என்றால், உடல் முழுவதும் உள்ளமாக மாறிவிட்டால் ! அதையே, உருகுகின்ற இயல்புடைய உள்ளங்கொண்டு ஒரு உருச்செய்ததுபோல என்னுடைய ஆக்கையை மாற்றி அமைத்தனன் என்கிறார். பேரின்ப அனுபவம் மனித உடலை மாற்றி எவ்வாறு உடல் முழுவதும் பரவி உருகச்செய்கின்றது என்பதை அடிகளாரைப்போல அவருக்கு முன்னும் பின்னும யாரும் இதுவரை விளக்கியதில்லை. சிவபுராணத்தில் இறைவன் பெருமை பேசினார். கீர்த்தித் திருஅகவலில் அவனது எளிவந்த தன்மை பேசி, அப்பாடலின் இறுதிப் பகுதியில் குருபரனாகி அருளிய பெருமையைக் கூறி, தம்மைத் தில்லைக்கு வருமாறு பணித்த சிறப்பையும் எடுத்துச்சொல்லி முடிக்கின்றார். அடுத்துள்ள அண்டப்பகுதியில், குருநாதர் தமக்குத் தந்த இறையனுபவத்தை விரிவாகப் பேசினார். அந்த இறை அனுபவத்தைப் பேசும்பொழுதே தம் மனம்