பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 335 முதலியவற்றை அல்லாமல் உடம்பைக்கூட மாற்றி அமைத்தான் என்பதை அள்ளுறு ஆக்கை அமைத்தனன் என்ற சொற்களால் குறிப்பிட்டார். அண்டப்பகுதியின் இறுதியில், தம்முடைய உள்ளத்தையும், உடம்பையுங்கூட மாற்றியமைத்து, இறை அனுபவத்தை முழுவதுமாகத் தந்தமைக்குக் காரணம், மேலும் சிலகாலம் இவ்வுலகிடை வாழ்ந்து திருவாசகம் என்னும் பரா அமுதம் தம் மூலம் வெளிப்படவே ஆகும் என்கிறார். அண்டப்பகுதியின் இப்பகுதிகளின் மூலம் ஒன்றை உய்த்துணர முடிகின்றது. திருவாதவூரர் என்ற தனி மனிதருக்கு அருள் செய்ய வேண்டும் என்று நினைந்திருப்பின் ஆலாவாய்ச்சொக்கன் கண்மூடித் திறக்கும் நேரத்தில் இதனைச் செய்திருப்பான். அதன் பயனாகத் திருவாதவூரர் பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவனடி சேர்ந்திருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அப்படியானால், இந்தத் திருப்பெருந்துறை நாடகம் யாருக்காகச் செய்யப்பெற்றது? பலர் கருதுவதுபோல மணிவாசகருக்கு என்று கருதினால் இந்த நாடகம் தேவையே இல்லை. இந்த உடலில் இருக்கும்பொழுதே அவருடைய உடலையும், உள்ளத்தையும் மாற்றியமைத்து ஆன்ம வளர்ச்சியின் கடைசிப் படியில் நிற்பவர் அடைகின்ற இறை அனுபவத்தை இங்கேயே தந்துவிட்டு, கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என ஆணையிட்டு மறைய வேண்டிய காரணம் என்ன? இது இறைவன் திருவுள்ளம் என்று எளிதாக விடை கூறிவிடலாம். உருகுகின்ற மனத்தைத் தந்த இறைவனேதான் சிந்திக்கின்ற அறிவையும் நமக்குத் தந்துள்ளான். 1200 ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நிகழ்ந்த இந் நாடகம், ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே தில்லை கூத்தனால் நிகழ்த்தப் பெற்றது. -