பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 திருவாசகம் - சில சிந்தனைகள் வெறும் அறிவைமட்டும் வளர்த்து, தருக்கித் திரிகின்ற மனிதர்களிடையே உணர்வை வளர்க்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. கோடிக்கணக்கான அடியார்களைப் பெற்றுள்ள கூத்தன், இதனை நிகழ்த்துவதற்காகவே ஒருவரைப் படைத்தான். அந்த ஒருவர் மாபெருங் கல்வியாளராக, உலக அனுபவம் நிறைந்த அமைச்சராக இருந்து, அறிவு வளர்ச்சியும், மன வளர்ச்சியும் பெற்றிருக்க வேண்டுமென்பது கூத்தனின் எண்ணம்போலும். இதன் பயனாக, இவை அனைத்தும் பொருந்திய ஒருவர், படைத்து வளர்க்கப் பெற்றார். அமைச்சர் ஆவதற்கோ, குதிரை வாங்குவதற்கோ வாதவூரர் படைக்கப்படவில்லை. எனவே, திருவாசகம் பாடப்படுவதற்குரிய நேரம் வந்தவுடன் கூத்தன் அவரை ஆட்கொண்டான்; எல்லையற்ற இறை அனுபவத்தைத் தந்தான். தான் வந்தவேலை முடிந்ததும் குருவாக வந்த கூத்தன் தில்லையுட் புகுந்துவிட்டான். தாம் விடுபட்டுப் போனதற்குரிய காரணத்தை அடிகளார் புரிந்து கொண்டார். அந்த நிலையில் நாரணன் முதலியோர் வழுத்தியும் காணா மலரடி இணைகள், தம்மைபோன்ற மனிதர் ஒருவருக்கு வழுத்துவதற்கு எளிதாய் வார்கடல் உலகினில் வந்த அருமைப்பாட்டை நினைக்கின்றார் அடிகளார். நன்றிப் பெருக்கால், சாயா அன்பினை நாள்தொறும் தாயே ஆகி வளர்த்தனை போற்றி என்று தொடங்கி நூற்றுக்கணக்கான அடிகளில்" போற்றி போற்றி என்று வணக்கம் செய்கிறார். இதுவே போற்றித் திருஅகவலாக அமைகின்றது. திருவாசகத்தின் முற்பகுதியில் இந்த நான்கு அகவல்களையும் அமைத்தவர்கள், இவை அகவல்களாக அமைந்திருப்பதால் ஒன்றாக இணைத்து முன்னர் வைத்தனரோ, வேறு என்ன காரணமோ தெரியவில்லை.