பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 29 ஒருவன் ஓரிடத்தில் தங்கியுள்ளான் என்றால் ஒரு விநாடிகூட அந்த இடத்தை விட்டுப்போவதில்லை என்பது பொருள் அன்று. ஒரு வீட்டில் நாம் குடி இருக்கிறோம் என்றால் இருபத்துநான்கு மணி நேரமும் அந்த வீட்டில்தான் இருக்கிறோம் என்பது பொருள் அன்று. பல நாட்கள் வெளியூர் சென்று மீண்டாலும் அந்த வீட்டில் நாம் இருப்பதாகவே கருதுகின்றோம். ஆகவே, இறைவன் உள்ளத்தில் உறைகின்றான் என்று மட்டும் கூறினால் நம்முடைய வாழ்வின் அடிப்படையில் இறைவன் ஒரேவழி வெளியே சென்று மீண்டும் வந்து உள்ளத்தில் குடியிருக்கிறான் என்ற தவறான பொருளைக் கொள்ள நேரிடும். அந்தப் பிழை நேராமல் இருப்பதற்காகத்தான் அடிகளார் பின்வருமாறு பேசுகிறார். ஒரு விநாடிகூட அவன் என் உள்ளத்திலிருந்து நீங்கினது இல்லை என்ற கருத்தைத் தெளிவுபடுத்துவதற்காக 'இமைப்பொழுதும் என்ற சொல்லையும், நீங்காதான்' என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார். நெஞ்சில் நீங்காதான் என்ற சொற்கள் சிந்திப்பதற்கு உரியன. மனம், அகமனம், உள்ளம், நெஞ்சு என்ற சொற்கள் இன்று ஒருபொருள் குறித்த பன் மொழியாக நம்மால் பயன்படுத்தப்படுகின்றன. பழைய இலக்கியங்களிலும் ஒரோவழி இவ்வாறு பயன்படுத்தப் பெற்றுள்ளது என்பது உண்மைதான். இங்கே அடிகளார். 'நெஞ்சு என்று கூறுவது சித்தத்தின் ஆழத்தில் உள்ள பகுதியையே ஆகும். ஆங்கிலத்தில் டீப்பர் கான்ஷியன்ஸ்’ (deeper conscience) என்ற சொல்லின் மூலம் எந்தப் பகுதியைச் சுட்டுகிறோமோ, அதே பகுதியைத்தான் நெஞ்சு என்ற சொல்லால் அடிகளார் கூறுகின்றார். இக்கருத்தைத் திருஞானசம்பந்தப் பெருமானும்,