பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருவாசகம் - சில சிந்தனைகள் உரைசேரும் எண்பத்து நான்குநூறு ஆயிரமாம் யோனிபேதம் . நிரைசேரப் படைத்துஅவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் (திருமுறை :1-132-4) என்று பாடிச்செல்கிறார். எனவே இறைவன் உறைகின்ற இடம் நெஞ்சு என்று அடிகளாரும், அது உயிருக்கு உயிராகவுள்ள இடம் என்று பிள்ளையாரும் கூறிச் செல்வதைக் காணலாம். அப்படியானால் நாம் ஏன் அதனை அறிய முடிய வில்லை? அன்றாட அனுபவத்திற்கூட இதைப் புரிந்து கொள்ள முடியும். விலை உயர்ந்த பொருள் ஒன்றைக் கைத்தவறுதலாக வைத்துவிட்டு, அதன்மேல் குப்பை கூளங்களைப் போட்டுவிட்டால் பிறருக்கும் சரி, நமக்கும் சரி அந்தக் குப்பை கூளங்களுக்கு அடியில் அந்த விலை உயர்ந்த பொருள் இருப்பதே தெரியாமல் போய் விடுகிறது. குப்பை கூளங்கள் மேலே இருக்கின்ற காரணத்தால் அதன் அடியில் விலையுயர்ந்த பொருள் இல்லையென்று கூற முடியுமா? அதேபோல உயிருக்கு உயிராயுள்ள, நெஞ்சில் நிற்கின்ற, பரம்பொருளை நாம் அறிவதில்லை. நம்முடைய புற மனத்தின் தொழிற்பாடான அறுவகைக் குற்றங்களும், இவற்றுக்கெல்லாம் மூலகாரண்மாகவுள்ள ஆணவமும் குப்பையாக நெஞ்சையும், அதன் உள்ளேயிருக்கின்ற பரம்பொருளையும் மூடியிருக்கின்ற காரணத்தால், நெஞ்சுள்ளே இறைவன் இருப்பதைத் தெரிய முடிய வில்லை. அப்படியே அவன் இருப்பதை அறிந்து கொண்டாலும் அவனை அங்கேயே தங்கவைப்பதற்குரிய பண்பாடோ, செயலோ நம்மாட்டு இல்லை. மனிதனுக்கு உள்ள மிகப் பெரிய குறைபாடாகும் இது. உறுதிப் பாட்டோடு, ஒருமுகம் கொண்ட மனத்தோடு நீண்ட நேரம் இருப்பது இயலாத காரியம். இது அருளாளர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. நம்