பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 33 திருவடி அல்லவா? ஆகவே நீங்காதானை வாழ்த்துவதை விட அவன் தாளை (திருவடியை வாழ்த்துகின்றார். இப்படி விரிவாகப் பேசும்போது சிலர் மனத்தில் சில ஐயங்கள் தோன்றலாம். இந்த இரண்டு அடிகளில் இவ்வளவு கருத்தையும் நினைத்து அடிகளார் பாடி இருப்பாரா? நாமாக நம்முடைய கருத்தை அந்த அடிகளில் ஏற்றுகிறோமா என்ற ஐயம் தோன்றினால் அது நியாயமானதே ஆகும். இவ்வளவு கருத்துக்களுக்கும் இடந்தருகின்ற சிறந்த சொற்கள் அமையப்பாடுவதே அருளாளர்களின் பாடல்களுக்குரிய தனிச் சிறப்பாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல, ஆயிரம் ஆண்டுகள் கழித்து விஞ்ஞானப் புதுமைகளிலேயே மனித வாழ்க்கை நடைபெறும் காலம் வந்தாலும், அன்றும் திருவாசகம் மனித வாழ்விற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும் அறிவு வளர்ச்சியால் பெறுவன விஞ்ஞானப் பயன்கள். மனிதன் அறிவால்மட்டும் வாழ்ந்து விட முடியாது. அவனுடைய வாழ்வில் பெரும் பகுதி உணர்வின் அடிப்படையில் நடைபெறுகின்றது. அந்த உணர்வுக்கு வழிகாட்டியாக இருப்பதுதான் திருவாசகம். மணிவாசகரைப் பொறுத்தமட்டில் ஒரு தனிச் சிறப்பு உண்டு. இறையனுபவத்தில் திளைக்கும் பக்தராகமட்டும் இல்லை. பெரும் கல்விமானாக, திருக்கோவையாரைப் பாடுகின்ற அளவுக்குப் பெரும் கவிஞராக அவர் வாழ்ந்தார். மேலும் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் அறிவு வளர்ச்சியின் பயனாய் மனித சமுதாயம் பெற்ற விஞ்ஞானக் கருத்துக்களைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்லும் பேராற்றலுடையவர் அடிகளார் என்பதைப் பின்னர் வரும் பகுதிகளில் நாம் விரிவாகக் காணலாம். கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க (3)