பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 35 ஆகி நின்று என்ற தொடர் இடம் தந்ததுபோலும், ஆனால், இதே மணிவாசகர், மன்னும் மா மலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் (கீர்த்தித் திருஅகவல்-9-10) என்றும் பாடுகிறார். ஆக, ஆகமத்தை அருளிச் செய்தான் என்றும் கூறுவதால், ஆகம வடிவினன் இறைவன், ஆகமத்தை அருளிச் செய்தவனும் இறைவன் என்ற கருத்தை வலியுறுத்துகிறார் என்றே கொள்ளலாம். ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க’ என்ற அடுத்துள்ள அடி கருத்து முரண்பாட்டை ஒன்றாகக் காணும் தமிழர்களுடைய தனிச் சிறப்பைக் காட்டும் அடியாகும். உலகில் எத்தனையோ சமயங்கள் உண்டு. அச்சமயங்கள் கூறும் இறைவன் எல்லா நலங்களுக்கும் உரியவனாகப் பேசப்படுகிறான். தீமைகள் உலகிடையே இருக்கின்றனவே, இவற்றை யார் படைத்தார்கள் என்ற வினாவை எதிர்கொள்ளும் அவர்கள் அதற்கென ஒரு தனித் தெய்வத்தைச் சாத்தான்’ என்ற பெயருடன் கூறினர். அப்படியானால் இரண்டு தலைவர்கள் என்ற சூழ்நிலை ஏற்படும்போது சாத்தான் ஒரு கடவுள்போலத் தோற்றமளிக்கின்ற ஒரு சூழ்நிலையும் உருவாகியது. இந்த இக்கட்டிலிருந்து மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் விடுபட்டு, எல்லாவற்றுக்கும் மூலம் இறைவனே என்று கூறினர். இரட்டைகள் என்று கூறப்படும் நன்மை - தீமை, ஒளி - இருள் என்பவை போன்றவற்றை நன்கு அறிந்திருந்த இத்தமிழர், தீமைக்கும், இருளுக்கும் தனித் தலைவனைச் சிந்திக்கவில்லை. அதற்குப் பதிலாக நன்மை - தீமை முதலிய இரட்டைகளில் இரண்டுமே இறைவனுடைய படைப்புத்தான் என்று கூறினர். இக் கருத்து மிகப் பழங்காலத்திலிருந்தே சைவ, வைணவ