பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 37 பொருத்தமானதுதான். ஆனால், அநேகன் என்ற சொல் 'னகர ஈறு பெறுவது வியப்புக்குரியது. ந + த்வைதம் = அத்வைதம் என்று வருவதுபோல, ந + ஏகன் = அநேகன்; வடமொழியில் 'ந'கரத்தின் திரியாக உள்ள 'அ'கரம் எதிர் மறைப் பொருளை உணர்த்தும் எழுத்தாகும். அதாவது ஏகம் அல்லாதது அநேகம் என்ற பொருளைத் தருவதாகும் இச்சொல். - அப்படியானால் அநேகம் என்றோ, அநேகர் என்றோ தான் வரவேண்டுமே தவிர அநேகன் என்ற னகர ஈறு போட்டு வருவது சிந்திப்பதற்குரியது. இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கு இந்தச் சொல்லுக்கு வேறுபொருள் காண்பவர்களும் உண்டு. ஆழ்ந்து சிந்தித்தால், மாபெரும் அறிஞரும், கலைஞரும் ஆகிய மணிவாசகர் ‘னகர ஈற்றைப் பெய்வதன் மூலம் ஒர் உண்மையைப் பெறவைக்கிறார். உயிர்கள் என்ற முறையிலும், உடைமைகள் என்ற முறையிலும், வடிவங்கள் என்ற முறையிலும் பலவாகக் காணப்படும் இப்பிரபஞ்சம் முற்றிலும் 'இறை சொரூபம் என்பதை அறிவிப்பதற்காக அநேகன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ஏகனாக இருக்கும்போது ஒரு பெயருக்கு உரியவனாக அவன் உள்ளான். அநேகனாக ஆகும்போது எப்படி அவன் ஒரு பெயருக்கு உரியவன் ஆக இருத்தல் கூடும்: ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிப் பெயர் உண்டல்லவா? அப்படி இருக்க ஒரே பெயரால் முறைப்படி இப்பொருள்களை எல்லாம் குறிக்க முடியுமா என்ற வினாத் தோன்றும். சொற்கள் பலவாயினும், பொருள்கள், வடிவங்கள் பலவாயினும் அவற்றின் உள்ளே இருப்பவன் ஒருவனே ஆதல் திண்ணம். ஆகவேதான் அளவை மாத்திரையில் பலவாக உள்ள பொருள்கள் உண்மையில் ஒன்றே என்ற கருத்துப் பெறப்படுகிறது.