பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருவாசகம் - சில சிந்தனைகள் பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி (தாயு கருன-6) என்று தாயுமானவப் பெருந்தகை பாடும்போது இறையடியாரின் ஒரு மனநிலையை அது அறிவிக்கின்றது. சாதாரண நிலையில் மலர் வேறு; அதனைப் பறித்து இறைவனுக்குச் சாத்தும் பணி வேறு; மலரை ஏற்றுக் கொள்ளும் இறைவடிவம் வேறு என்று மூன்று பொருள் களாக இருப்பதை அறிய முடியும். ஆனால், மலர் பறித்து இடும் புறப்பூசை, அகப்பூசையாக வளர்ந்துவிட்ட நிலையில் ஒரு மலரைப் பார்க்கும்போது அதனுடைய அகவிதழ், புறவிதழ், மகரந்தம், மணம், வடிவம் என்பவற்றையெல்லாம் தாண்டி, அதன் உள்ளே குடி கொண்டிருக்கும் இறைவனைக் காண முடிகின்றது. அதனால்தான் தாயுமானவப் பெருந்தகை மலரில் நீ இருத்தி என்று பாடாமல் மலர் ஊடு நீயே இருத்தி’ என்று பாடுகிறார். இதை விளங்கிக்கொண்டு பார்க்க, ஏகன் ஆகவும், அநேகன் ஆகவும் இருக்கும் இறைத் தன்மையை ஒருவாறு விளங்கிக் கொள்ள முடியும். பொருள்களைப் பெயரிட்டு அழைப்பது இயல்பு ஆதலால் அநேகன் என்கிறபோது என்ன பெயரிடுவது என்ற ஐயம் தோன்றுமே! அதனை மனத்துள் கொண்டு போலும், ஏகனாக இருப்பவனும் இறைவன்தான். அநேகனாக இருப்பவனும் இறைவன்தான் என்று நம்மைத் தெளியவைக்கும் முறையில் 'இறைவன்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ஆண்டவனைக் குறிக்க எத்தனையோ சொற்கள் இருக்க இறைவன் என்ற சொல்லை அடிகளார். பயன்படுத்துவது ஒரு காரணம் குறித்தாகும். இறைவன் என்ற சொல்லின் பகுதி இறை' என்பதாகும். இறை என்ற சொல்லுக்கு இறுத்தல் என்பது பொருள் ஆகும்; அதாவது தங்குதல் என்ற பொருள் பெறும். இச்சொல் எல்லாப் பொருளிலும்