பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 75 ஆனால் இறைவன் இவர்களை விட்டுவிட்டு வேறு எங்கோ இருக்கிறானோ? வந்து அருளி என்று சொன்னால் எங்கோ புறத்தே இருந்து அகத்திற்கு வருகிறான் என்ற பொருளை அல்லவா அது தருகிறது என்று நினைந்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. உள்ளத்தின் ஆழத்தில் எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான் என்பது உண்மைதான். என்றாலும், மனத்தின் அறுவகைக் குற்றங்களும், ஏனைய உலகவியல் நிர்ப்பந்தங்களும் இறைவன் உள்ளே உறைவதை மூடி மறைத்து நிற்கின்றன. இறைவன் இந்த மறைவிலிருந்து வெளிப்பட வேண்டுமென்று கருதுகிறவர்களும், மேலே உள்ள குப்பைகளை அகற்ற வேண்டுமென்று அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது உள்ளேயுள்ள இறைவன் வெளிப்படுகிறான். 'வந்தருளி என்ற சொல்லின் பொருளாகும் இது. புறத்தேயிருந்து வருவது என்றல்லாமல் அக மனத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுவதை இச்சொல் குறிக்கும். இனி, பொய் ஆயின எல்லாம் போய் அகல என்ற தொடரைச் சிந்திப்போம். அகல என்ற வினையெச்சம், 'வந்து அருளி என்ற வினை கொண்டு முடிகிறது. இம் முறையில் வருவதைக் காரண காரிய எச்சம் என்று இலக்கண நூலார் கூறுவர். மழை பெய்யக் குளம் நிறைந்தது' என்ற தொடரில் 'பெய்ய’ என்ற வினையெச்சம் நிறைந்தது என்ற வினைகொண்டு முடிவதைக் காணலாம். பெய்தல் ஆகிய காரணத்தால் நிறைதல் ஆகிய காரியம் நிகழ்ந்ததுபோல, வந்து அருளி' என்ற தொடரில் வந்தருளுதலாகிய காரணத்தால் வினை அகலலாகிய காரியம் நிகழ்ந்தது என்று பொருள்கொள்ள வேண்டும். அவன் வந்து அருளினான், அதன் பயனாய் உள்ளத்துள் நின்று பொய் அகன்றது என்பது ஒரு பொருளாகும்.