பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருவாசகம் - சில சிந்தனைகள் உள்ளத்துள் உள்ள பொய்யைப் போக்குதல் மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட செயலாகும். அது போக வேண்டுமானால் இறையருள் ஒன்றினால்தான் அதனைச் செய்ய முடியும். ஆகவேதான், அவன் வந்து அருளினான் என்ற காரணத்தால் போய் அகலுதல் ஆகிய காரியம் நிகழ்ந்தது என்று கூறினார் அடிகளார். 'பொய்யாயின போய் அகல" என்று கூறியிருந்தால் போதுமே, பொய் ஆயின எல்லாம் என்று கூறுவதன் காரணம் என்ன? சிலவற்றை நாமே பொய் என்று அறிவோம். சிலவற்றின் உண்மை இயல்பு அறியாமல் அதனை மெய் என்று கருதுவோம். நமக்கு இந்த நேரத்தில் மகிழ்ச்சி தருகின்ற காரணத்தால் இதுவே மெய் என்றும்; இதுவே சத்தியம் என்றும் கருதுகிறோம். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அது பொய் என்ற நினைவு தோன்றுவதே இல்லை. இறைவனது திருவடிசம்பந்தம் பெறும்போதுதான் அந்தப் பொய்கள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்குகின்றன. இதனைச் சுட்டவே 'பொய் ஆயின என்பதோடு நிறுத்தாமல் பொய்யாயின் எல்லாம்: என்றார். பொய், மெய் என்று ஆராய்ந்து காணும் அறிவும்கூட இறையருள் கிடைக்கும்போது அழிந்துவிடுகிறது. பொய், மெய் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடும் அறிவு நான்' (அகங்காரம் எனது (மமகாரம் என்பவை இருக்கின்ற வரையில் பணி புரிந்துதான் தீரும். இந்த நானும், அது தோன்றுகின்ற மனமும், நானில் தோன்றுகிற அறிவும், அந்த அறிவு கண்டுகொள்ளும் மெய், பொய் ஆகிய இரண்டும் ஆகிய அனைத்தும் ஒருசேர, ஒட்டுமொத்த மாகத் தூக்கி எறியப்படுதலின் ஆயின எல்லாம் என்றார் அடிகளார்.