பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 77 அதைவிடச் சிறப்பு, போய் அகல என்ற சொற்களே யாகும். இறைவன் உள்ளத்தில் வந்து புகுந்தவுடனேயே இவை தாமாகப் போய்விடுகின்றனவாம். இவற்றை விரட்ட அவனும் முயற்சி எடுத்துக்கொள்வதில்லை; நாமும் முயற்சி எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒளி கண்ட இடத்தில் இருள் தானே ஒடுவதுபோல இறைவன் திருவடி சம்பந்தம் கிடைத்தவுடன் பொய் ஆயின. எல்லாம் சொல்லிக் கொள்ளாமல் தாமே போய் விடுகின்றன. - மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே (38) என வருவது சிந்திக்கத்தக்கது. 'வந்து அருளி' என்ற செயலுக்கு வினைமுதல் யார்? அது வந்தவுடன் பொய் அனைத்தும் போயின என்பது உண்மைதான். ஆனால் வந்தது யார் என்று அறிந்துகொள்ள வேண்டுமே. அதற்காகத் தம்முடைய கருணை காரணமாக அடிகளார் மேலும் விளக்குகிறார். வந்த பொருள் எது? மெய்ச் சுடர் என்றதால் ஒளி வடிவு உடையது என்பது பெறப் படுகிறது. மிளிர்கின்ற” என்ற பெயரெச்சம் 'சுடர்' என்ற பெயர்கொண்டு முடிகிறது. சுடருக்கு மிளிர்கின்ற” என்கின்ற அடை ஏன் கொடுக்கப்பெற்றது? எல்லாச் சுடரும் திரி முதலிய ஏதாவதொன்றைப் பற்றித்தான் நிற்குமே தவிர தனியே நிற்கும் இயல்புடையதன்று. திரியைப் பற்றிநிற்கும் சுடர் எரியும்போது திரி கறுப்பாய் இருத்தல் கண்கூடு. இதனை மைபொதி விளக்கு (பெ.பு:மெய்-7) என்பார் சேக்கிழார். இறைவனைச் சுடர் என்றால் அவனும் ஏதோ ஒன்றைப் பற்றித்தான் நிற்கவேண்டுமோ என்ற ஐயம் தோன்றுகிறது. பற்றுக்கோடு இல்லாதவன் என்பதுதானே அவனுடைய இலக்கணம்; அவ்வாறிருக்க, இந்தச் சுடர் என்ற உருவகம் பொருந்துமா என்ற வினா ஒருவேளை தோன்றுமன்றோ. அதனைப் போக்குவதற்கே "மெய் என்ற அடைமொழியும்,