பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 79 அறிவின் எல்லையில் நிற்கின்ற ஞானிகள். அவர்களுக்கு மட்டும் இறைவன் இன்பம் தருவதில்லை. எவ்வித ஞானமும் இல்லாமல் இறைவன் பெயரைச் சொல்லிச் சொல்லி அதிலேயே இன்பம் அடைகிறவர்களும் உண்டு. அந்த ஞானி பெறுகின்ற இன்பத்தை இவனும் பெறுகிறான். இந்த நாட்டைப் பொறுத்தவரை ஞானத்தால்தான் இறைவனை அடைய முடியும், உணர முடியும் என்ற கொள்கை வலுப்பெறவில்லை. அறிவில் முதிர்ந்த நிலையாகிய ஞானத்தின்மூலம் இறைவனை அறிவதைவிட, மனத்தின் உணர்வையே துணையாகக் கொண்டு அவனை அனுபவிப்பது மிகச் சிறந்ததாகும் என்ற கொள்கை உடையவர்கள் பழந்தமிழர்கள். இதை மனத்தில் கொண்டுதான் ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த நாவுக்கரசர் பெருமான் ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் ஞானத்தால் தொழுவேன்உனை நானலேன் (திருமுறை : 5-92-3) என்று கூறியிருப்பது சிந்தனைக்குரியது. இதனையே எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடிகளார் இன்னும் சற்று விரிவாக எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே’ என்றார். எவ்வகை ஞானமும் இல்லாத எனக்கும் பெரும் இன்பத்தைத் தரும் பெருமானே என்கிறார். - அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய் (40-41) என்று அடுத்துப் பேசுவது சிந்தனைக்குரியது. ஞானம் இல்லாவிடினும் இறையனுபவமாகிய இன்பத்தை அனுபவித்தபிறகு ஒரு புதுமை நிகழ்கிறது. அதுவரை சூழ்ந்திருந்த அஞ்ஞானம் இந்த அனுபவத்தின் விளைவாக