பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருவாசகம் - சில சிந்தனைகள் வைணவர் ஆகிய இருவரும் இந்தப் பிரபஞ்சம் என்றும் உள்ளது என்று கூறுபவர்கள் ஆவார்கள். அதே கருத்தை அடியொற்றி ஆக்குவாய்’ என்றார் அடிகளார். சோறு ஆக்கினள் என்றால் அரிசி ஆகிய மூலப்பொருளிலிருந்து சோறு ஆக்கப்பட்டது என்று பொருள்படும். அரிசியின் வடிவு, இயல்பு ஆகியவற்றை மாற்றிச் சோறு புதிதாகப் படைக்கப்படுகின்றது. அதுபோல, அணுக்கள் வடிவமாக இருக்கும் பிரபஞ்சத்தினை அண்டப் பகுதிகளாக, உண்டைகளாகப் பரம்பொருள் ஆக்குகிறான், ஆதலால் ஆக்குவாய்’ என்றார். இப்படி ஆக்கப்பட்ட பொருள்கள் எல்லையற்ற பெருவெளியில் ஓயாது சுற்றிக் கொண்டிருப்பதால் ஒன்றோடொன்று முட்டி மோதி அழிந்துவிடாமல் அவற்றைக் காக்கின்றான் அவன். அவை தமக்குள் முட்டி மோதி அழியாமல் காக்கின்றானே தவிர, அவற்றின் கால நிர்ணயம் முடிந்தவுடன் அவனே இப் பிரபஞ்சத்தை அழித்துப் புதிய பிரபஞ்சத்தை உண்டாக்குகிறான். ஏன் இதனைச் செய்ய வேண்டும் அவன்? உயிர்கள்மாட்டுக் கொண்ட கருணையினால் இதனைச் செய்கின்றான் என்பதை அறிவுறுத்த ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய்', என்பதை அடுத்து அருள் தருவாய்' என்கிறார் அடிகளார். போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில் . . . . . . (43) இந்த அடி அடிகளாரின் வாழ்க்கையோடு, அந்த வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சியோடு ஒருங்குவைத்துச் சிந்திக்கப்பட வேண்டியதாகும். இரண்டு மாறுபட்ட கருத்துகள் இந்த ஒரே அடியில் இருக்கின்றன. "என்னைப் போக்குவாய்' என்பது ஒன்று. ‘என்னை நின்தொழும்பில் புகுவிப்பாய்’ என்பது மற்றொன்று.