பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருவாசகம் - சில சிந்தனைகள் அடிப்படையில் இருப்பது மனம். அதிலிருந்து தோற்றுவது சொல். சொல்லே மாற்றம் என்று கூறப் பட்டது. இவை இரண்டுக்கும் எட்டாத பொருள் பெரும்பாலும் இல்லையென்று கூறலாம். மனத்தின் வீச்சுக்கு எல்லை இல்லை என்பதை அன்றும், இன்றும் அனைவரும் அறிந்து உள்ளனர். ஆனால், மனத்தின் இந்த வீச்சு உலகியல் நிலையில் நின்று பார்க்கும்போது எல்லை அற்று இருப்பதாக நினைக்கின்றோம். சாதாரண உணர்ச்சிகளைக்கூட வெளிப்படுத்த முடியாத இந்தச் சொற்களைக்கொண்டு, கடந்து நிற்கும் பொருளை முழுவதும் அறிந்து கூறிவிட்டதாக நினைப்பது பெரும் தவறாகும். ஓர் அளவே செல்லக்கூடிய சொல், அதனையும் கடந்து மிகப் பெரிய அளவில் செல்லக்கூடிய மனம் ஆகிய இரண்டுமே பரம்பொருளை அறியவோ, தெரியவோ, கூறவோ பயன்படாதென்பதை அடிகளார் இந்தத் தொடரில் விளக்குகிறார். 'கழிய’ என்றதால் சொல்லும், மனமும் இவ் ஆராய்ச்சியில் ஈடுபட்டு எவ்வளவு உயரச் சென்றாலும் அவை இரண்டும் பிற்பட்டுக் கழிந்துபோகுமாறு மேல் நோக்கி நிற்பவன் இறைவன் என்பது பொருளாகும். 'மறையோன்' என்ற சொல்லுக்கு அந்தணன் என்பதும், அபெளர்ஷேயம் என்று சொல்லப்படும் வேதத்தை அருளியவன்' என்பதும் யாவரும் அறிந்த பொருளாகும். ஆனால், மறையோன் என்ற சொல்லின் முற்பகுதியிலுள்ள 'மறை என்பது, பிறர் அறிய, தெரிய முடியாதபடி மறைந்துவிடுதல் என்ற பொருளையும் குறிப்பால் தருவதால் மறையோன் என்ற சொல்லுக்கு மறைந்து நிற்பவன் என்ற குறிப்புப் பொருளையும் கொள்ளலாம். - இந்த அடியில் மற்றொரு சிறப்பையும் காணலாம். நின்ற என்ற பெயரெச்சம் மறையோன் என்ற பெயர்