பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருவாசகம் - சில சிந்தனைகள் ஒருவகையினர். மற்றொரு வகையினர், எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன்” (திருவாச.-34) என அடிகளாரே பின்னர்க் குறிப்பிடுவது போல, மனித உயிர்களுக்கு இயல்பாக அமைந்த மூன்றையும் அடக்கி, அறுபது நாழியும் இறையுணர்வில் ஈடுபட்டு தம்மையே மறந்து நிற்பவர்களாவர். இவர்களையே சிறந்த அடியார் என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட அடியார்கள், 'சேய்போல் இருப்பர் கண்டிர் சிவஞானிகளே’ என்பதற்கிணங்க இருத்தலின், இவர்களை இனம் கண்டுகொள்வது கடினம், பாலிலுள்ள சுவையை வாயில் ஊற்றியவுடன் முழுவதுமாக அறிவது எல்லோருக்கும் இயன்ற ஒன்று அன்று. அதுபோல் இந்தச் சிறந்த அடியார்களை இனம் காண்பது கடினம். சாதாரண மக்கள் பாலின் சுவையை உடனே அறிவதற்கு உதவுவது அதனுடன் கலக்கப்பட்ட கன்னலும், நெய்யும்தான். அதேபோல, சிறந்த அடியார்களை இனம் காணுமாறு செய்வது அவர்கள் சிந்தனையுள் தோன்றி நின்று அவர்க்ள் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகின்ற இறையருளே ஆகும். 'பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்’ என்ற இந்த அடியில் பிறந்த பிறப்பு’ என்ற சொற்கள் யாருடைய பிறப்பைக் குறிக்கின்றன என்பது சிந்திக்கப்பட வேண்டும். சிறந்த அடியாராக இருப்பினும் அவர்கள் இந்த உலகில் வாழ்கின்றவர்கள் என்பதைப் பிறந்த பிறப்பு என்ற சொற்கள் குறிக்கின்றன. ஆகவே, எத்துணைச் சிறந்த அடியாராக இருப்பினும் இப்போது அவர் ஒரு பிறப்பு எடுத்துள்ளார் என்பதை மறக்க முடியாது. தாம் எடுத்த பிறப்பைப் போக்கிக்கொள்ள அந்த அடியார்கள் எந்த முயற்சியையும் செய்யவில்லை. w