பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் 121.

          மானே அருளாய் அடியேன்
                    உனை வந்து உறுமாறே 90

உண்மையை உணர முயலாமல் பாண்டியனிடம் சென்று, ஆவணி மூலத்தில் குதிரை வரும் என்று கூறி விட்டார் அடிகளார். திருப்பெருந்துறையில் தம் மனத்திடைத் தோன்றிய இந்த எண்ணம் இறைவனுடைய கூற்று என்று தவறாக நினைந்து கூறிவிட்டாரே தவிரப் பொய்யுரைக்க வேண்டும் என்று கருத்திலன்று. ஆனால், அன்று குதிரை வாராமையின் அவர் உரைத்தது பொய் என்று அரசன் முதலியோர் கருதினர். அதற்குரிய தண்டனையும் வழங்கப்பட்டது. எனவே, ஏனை யோரைப்போல அடிகளாரும் தாம் உரைத்தது பொய் என்ற முடிவிற்கு வந்துவிட்டார். அந்த எண்ணம் வலுப்பெற வலுப்பெற இருபத்தெட்டு இடங்களில் தம்மைப் பொய்யனென்று அவர் கூறிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. அந்த எண்ணத்தின் முதிர்ச்சியில் விளைந்தது இப்பாடல்.

பொய் என்று தெரிந்தும் அதைக் கூறுபவர்கள்கூடத் தம் பிழையை நினைந்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டின், அவன் மன்னிப்பான் என்ற கருத்தில் 'ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே' என்று பாடுகிறார்.

- இதே கருத்தை ‘என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய்' (திருவா:154) என்றும் பாடியுள்ளதைக் காணலாம்.

பெருந்தவறு செய்தவர்கள் பிராயச்சித்தம் என்ற பெயரில் சில சடங்குகளைச் செய்தால் தம் பாவங்களிலிருந்து விடுபடலாம் என்று கூறும் வடநாட்டுத் தரும சாத்திரங்களைத் தமிழ்நாட்டவர் பலரும் ஏற்றுக்கொண்டதேயில்லை.