பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 127


எவ்வாறாயினும் குருநாதர் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிவந்த அடிகளார், இப்பொழுது அடி நாதத்தையே மாற்றுகின்றார்.

'விதையில்லாமல் விளைவை உண்டாககக் கூடியவன் நீ எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கின்றவன் நீ. உலக பந்தங்களிலும், அரசியல் வாழ்விலும் ஈடுபட்டு வஞ்சகம் பொய் முதலியவற்றை உறுதுணையாகக் கொண்டு வாழ்ந்த கடையவனான என்னையும் உன் திருமுன்னர் எல்லாவற்றையும் துறக்குமாறு செய்தாய். அம்மட்டோடு நில்லாமல் உன்னால் ஏற்றுக்கொள்ளப் பட்ட அடியவர்களின் கூட்டத்தில் ஒரே விநாடியில் சம உரிமை பெற்றவனாகப் புகுத்தினாய். இவ்வளவையும் செய்துவிட்டு இப்பொழுது என்னைக் கைவிட்டு விட்டாயே, இது முறையா? பெருமானே! எங்களிடம் வழங்கும் ஒரு பழமொழி உனக்குத் தெரியுமா? தாமே வளர்த்த மரம், வளர்ந்த நிலையில் நச்சுத்தன்மை உடையதாக மாறிவிட்டாலும் மரத்தை வளர்த்தவர்கள் அதனை வெட்டமாட்டார்கள். சிந்தித்துப் பார்த்தால் நானும் உனக்கு அப்படித்தான். எனவே, என்னைக் கைவிடுதல் என்பது உனக்கு அழகன்று என்பது குறிப்பெச்சம்.

101.

உடைய நாதனே போற்றி நின் அலால்
      பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ பணி போற்றி உம்பரார்
      தம் பராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்
      கருணையாளனே போற்றி என்னை நின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்
      அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே97

பணி-கட்டளையிடு. உம்பரார்-தேவர்.