பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 133


அடிகளாரின் இந்த விண்ணப்பம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

‘என்னை ஏற்றுக்கொள் என்று உன்னிடம் வந்து கேட்குமளவிற்கு நான் வளர்ச்சியடையவில்லை. நான் கடையவன். நீ யார்? நான் யார்? நம்மிடையே உள்ள உறவு என்ன? நீ என்னை ஏற்றுக்கொண்டாலன்றி எனக்கு நிம்மதியே இல்லை என்பவற்றையெல்லாம் அறிந்து நான் உன்னிடம் வந்து முறையிடவில்லை. இவற்றையெல்லாம் அறியமுடியாத கடையவன் ஆக உள்ளேன் நான். அப்படியிருக்க, நீயே வந்து ஆட்கொண்டாய். அம்மட்டோ! இல்லை, கலந்தல்லவா ஆட்கொண்டாய். நீ ஆண்டான்; நான்அடிமை என்பதை நீ தெரிவித்திருந்தாலே போதுமானது. அதன்மேலும் பல படிகள் சென்று என்னுள் கலந்தாய். இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். கடையவனாகிய என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி, திருப்பெருந்துறையில் மானிட உருவுடன் வந்து கலந்து ஆட்கொண்டாய்.'

‘இதற்கு ஒரே ஒரு காரணந்தான் தென்படுகிறது. என்பால் தகுதியில்லை, எனவே, நீ என்னைக் கலந்து ஆண்டது உன் அளப்பருங் கருணை காரணமாகவே என்பதை நன்கு புரிந்துகொண்டேன்.'

‘கருணை காரணமாக நீயே வந்து கலந்து ஆட்கொண்டுவிட்டு, இப்பொழுது திடீரென்று என்னை விடுவது முறையன்று.'

‘எதிர்த்துவந்த புலியைக்கூட அழித்ததோடு, நில்லாமல் அதன்மேல் கொண்ட கருணையால் அதன் தோலையே நீ உடுத்துக்கொண்டவன் ஆயிற்றே?'

'ஐயா! நீ ஆட்கொண்டபொழுது நின் பல் கணத்து எண்ணப்பட்டு இறுமாந்து (திருமுறை; 4-9-11) இருந்த நான், இன்று தளர்ந்துவிட்டேன். கருணையினால்