பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 197


எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன்

(திருவாச. 3:19-28)

என்று பாடியுள்ளார்.

கதிரவன் தன்பாலுள்ள ஹைட்ரஜன் முதலிய வாயுக்களை எரிப்பதன் மூலம், தன்னைத் தானே எரித்துக்கொண்டு இந்த ஒளியையும் வெப்பத்தையும் தருகிறான் என்பது இன்றைய வானியலார் கருத்து. வேதகாலக் கருத்துக்கு மாறுபட்ட இக்கருத்தை எட்டாம் நூற்றாண்டு விஞ்ஞானியாகிய அடிகளார் கூறுகிறார். சூரியன் கடவுள் அல்லன், அவனுக்கென்று தனித்தன்மை எதுவுமில்லை, அவனுக்குத் தோற்றம் மறைவு உண்டு என்ற கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கி 'அருக்கனில் சோதி அமைத்தோன்' (திருவாச. 3-20) என்று பாடுகிறார்.

இறைவனுக்குரிய அட்ட மூர்த்தங்களில் கதிரவனும் ஒரு மூர்த்தம் என்று கூறும் கருத்தை மிக அழகாக மறுத்து, 'சோதி அமைத்தோன்’ என்று கூறுவதன்மூலம் அமைக்கப்பட்டவனாகிய கதிரவன் ஒரு கோள்தான் என்றும் அவனிடம் சோதி அமைத்தவனாகிய இறைவனே தலைவன் என்றும் கூறினாராயிற்று.

இத்தனை கருத்துக்களையும் உள்ளடக்கித்தான் ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி' என்றார்.

பறவை இனங்களில் சில, பாடும் இயல்புடையன. மிக உயர்ந்தவனாகிய மனிதனும் சில சமயங்களில் பாடுகிறான். எப்பொழுது பாட்டு வருகிறது? மகிழ்ச்சி காரணமாகவோ துயரம் காரணமாகவோ மனத்தில் கனிவு ஏற்பட்டு, அக்கனிவு உள்ளத்தைச் சென்று தாக்கும்போது, தன்னையும் அறியாமல் மனிதன் பாடுகின்றான். பாடும் இயல்புடைய பறவைகளும் அவ்வாறே. இதனையே ஞான-