பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஒரு குறிப்பிட்ட பயன் தமக்கு வேண்டும் என்ற கருத்துடன் வலம்வருதல், மலரிட்டுத் திருவடியைத் தொழுதல் ஆகியவற்றைச் செய்கின்றவர்களை, அன்பர் என்று அடிகளார் குறிப்பிடுவது எதிர்மறைப் பொருள தாகும். அதாவது, உண்மை அன்பு இல்லாதவர்களை 'அன்பர்' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.

மலரிட்டு வழிபட்டதன் இறுதியில், எல்லாம் எமக்கே பெறலாம் என்று இருந்தால் அந்தப் பூசை மிகவும் குறைபாடுடையது ஆகும். எனவே, அத்தகையவர் உள்ளத்தில் நில்லாதவன் இறைவன் என்கிறார். அப்படியானால்-அவர்கள் உள்ளத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டான் என்றால், இவருடைய பொக்கம் இறைவனால் அறியப்படாமல் போய்விடுமோ என்ற ஐயத்தைப் போக்குபவர்போல, அவர் உள்ளத்தில் கரந்து, கள்வனாக மறைந்து நின்று அவர்கள் பூசையைக் கண்டு நகையாடுகிறான் என்கிறார். உள்ளத்தில் நிற்றல், அந்த உள்ளத்தில் தன்னலமும், ஆசையும் இல்லாதவழியே நடை பெறுவதாகும். அத்தகையவர் உள்ளத்தில் நிலைபேறாக நின்றுவிடுகிறான் என்பது தேற்றம். அவ்வாறில்லாத, பயன் கருதிப் பூசை செய்வோர் உள்ளத்தில், அவன் வெளிப்பட நிற்கமாட்டான். ஆனால், கள்வன்போல் கரந்துநின்று அவர்கள் செயலைக் கண்டுகொள்கிறான் என்று பொருள் கொள்வது சரியென்றே தோன்றுகிறது. 'கரந்து நின்று' என்பது 'மறைவாக நின்று' என்ற பொருளையே தரும். மறைந்து நின்றான் என்றால், நிலையாக நிற்கவில்லை என்பது பொருளாகும்.

இப்பாடலின், பின் இரண்டு அடிகளில் 'உன் திருவடிக்கண் அன்பை, முழுவதும் ஆகவும், நிரந்தரம்' ஆகவும் செலுத்துகின்ற ஒரு தகுதியை அருள்வாயாக என்கிறார்.