பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 209


சொற்களுக்கு முரணாக இருத்தலின், புறத்தே இனிமையாகப் பேசி உள்ளத்தில் வஞ்சகம் உடையவள் என்று கருத்துத் தொனிக்கப் 'படிறீ’ என்ற அவளை விளித்தனர். அம்மட்டோடு இல்லாமல் தோழியருடன் சேர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது நேற்று இவ்வாறு கூறினாள். 'மலைஇலக்குப்போல் உயர்ந்து நிற்கும் சிவபெருமானை, நான்முகனும் திருமாலும் காணாமல் போனது விந்தைதான். என்போன்றவர்கள். அவனை நன்கு அறிவோம்’ என்று இப்போது துயில்பவள் பலமுறை பேசியுள்ளாள். அப்பொழுது அவளுடைய பேச்சு, பாலும் தேனும் கலந்ததுபோல இனிமை உடையதாக இருந்தது. ஆதலின், தோழிமார்கள் அவளை முற்றிலும் நம்பினர். அவள் பேசிய சொற்களுக்கும் இப்பொழுது அவள் செயலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமையால் ‘உலகிலுள்ள பொய்களை யெல்லாம் ஒருங்கிணைத்துப் பேசும் படிறீ வந்து கதவைத் திறப்பாயாக’ என்று கூறினர்.

ஞாலம், விண் என்பவை அவ்வவற்றிற்குரிய உலகங்களைக் குறித்து நின்றன. அண்டத்தைப் பொறுத்த வரை இந்த மண்ணுலகம், விண்ணுலகம்போன்ற பல. உலகங்கள் இருத்தலின் அவற்றையும் உள்ளடக்கிப் 'பிறவே’ என்றார். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தன்னைப் படைத்த தலைவனை அறிய முயன்றாலும் அறிய முடியாதவன் என்றார்.

அப்படி அறிவரியானாக இருந்தாலும் சிற்றுயிர்கள் ஆகிய நம்மாட்டுக் கருணை கொண்டவன்; இயல்பாகவே நம்மிடமுள்ள குற்றங்களைக் களைந்து, ஆட்கொள்ளும் தன்மையுடையவன் என்று அவன் பெருமையைத் தெருவுதோறும் ஓலமிட்டுக்கொண்டே வருகின்றோம். நாம் அறிவோம் என்று நேற்றுப் பேசிய நீ, எங்கள் ஓலங்களைக் கேட்டும் எழுந்து வரவில்லை என்றால் தோழி! நின் பரிசு இருந்தவாறு என்னே! என்றார்கள்.