பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


நம்பியாரூரர் திருமணம் செய்துகொண்ட பரவையாரும் சங்கிலியாரும் இவ்வகையைச் சேர்ந்தவர்களே ஆவர். இங்ஙனம் கன்னி மாடங்களில் தங்கியவர்களில் ஒருசிலர் தாங்களாகவே அடியார் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணம் செய்துகொண்டு அவருடனேயே வாழ்வதும் உண்டு. அத்தகையவர்களையே 'பிணாப்பிள்ளைகாள்’ என்று அடிகளார் குறிப்பிடுகின்றார்.

நாம் காணக்கூடிய பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒலி வடிவும் பொருள் வடிவும் கொண்டனவாகும். இவ்வடிவுகள் இரண்டும் அவற்றின் இயல்புகளாகும். வெற்றிடம் என்று சொல்லப்படுகின்ற ஆகாயத்திலும் அநாதியான சப்தம் உண்டு என்று இன்றைய விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது. இதனையே அடிகளார் ‘சொற்கழிவு' என்றும் ‘பொருள் முடிவு’ என்றும் கூறினார்.

'சொற்கழிவு' என்றதால் சப்தப் பிரபஞ்சத்தையும் ‘பொருள்முடிவு’ என்றதால் அர்த்தப் பிரபஞ்சத்தையும் கூறினார். இதன் மூலம் இறைவன் சப்த, அர்த்தப் பிரபஞ்சங்களைக் கடந்து நிற்பவன் என்பதையும் கூறினார் ஆயிற்று.

பாதமலர் கீழுலகம் ஏழையும் கடந்து, சுட்டப்படும் சொல்லையும் கடந்து இன்னும் கீழே சென்றுள்ளது. அவனுடைய திருமுடி நிலையியல் பொருள், இயங்கியல் பொருள், வன்பொருள், நுண்பொருள் ஆகிய அனைத்துப் பொருள் வடிவையும் கடந்து நிற்பதாயுள்ளது.

உண்மையைக் கூறுமிடத்து ஒரு சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஒரு குறிப்பிட்ட சொல் குறிப்பிட்ட பொருளைப் பண்டு தொட்டு மரபுபற்றிக் குறிப்பதாகவே நம் முன்னோர் கருதினர்; அதனை இடுகுறி என்றே கூறினர். சில சமயங்களில் இச்சொல் அப்பொருளைச் சுட்டாமல்