பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 229


அடிப்படையாகக் கொண்டே பிணாப் பிள்ளைகளிடம் நீராட வந்தவர்கள் வினாக்களைத் தொடுக்கின்றனர்.

இவ்வினாக்களைச் சற்றுச் சிந்தித்தால் இப்பெண்களின் மனநிலையை ஒருவாறு புரிந்துகொள்ள முடியும். எங்கும் எல்லாவற்றிலும் நிறைந்தும் அவற்றை கடந்தும், கால தேச வர்த்தமானங்களைத் தாண்டி நிற்கும் பொருள் அது என்ற பொருள்பட இதுவரை பாடிக்கொண்டு வந்தவர்கள் இவர்கள். அவ்வாறு பாடுகின்றவரையில் அப்பொருளினிடத்து அச்சம் கலந்த பக்தி தோன்றிற்றே தவிர நெருக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. இப்பொழுதுதான் அவன் ‘தொண்டருளன் ஒரு தோழன்’ என்ற புதிய சிந்தனை தோன்றிற்று. திருவருட் பயனாகத் தோன்றிய இந்தப் புதிய சிந்தனை மனத்திடை வந்ததும், அவனிடம் நெருக்கம் மிகுதியாயிற்று; நெருக்கம் மிகுதியானவுடன் அவன்பற்றிய சில கூறுகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இவ்வினாக்கள் வெளிப்பட்டன.

இந்த எண்ணம் தோன்றியவுடன் எல்லா உயிரிலும், எல்லா உடம்பிலும் நீக்கமற நிறைபவன் அவன் என்ற எண்ணம் பின்னடைந்துவிடுகிறது. எனவே, அவனுக்கு நண்பர்கள் யார்? அவனை அறியாமல், அறிய முயலாமல் இருக்கும் அயலார் யார்- என்ற வினாக்களைத் தொடுக்கின்றனர்.

இதுவரை அவர்கள் பாடிவந்தது, கற்பனைக்கு அப்பாற்பட்டுள்ள ஒருவனின் பெருமையைக் குறிப்பிடு வதாகும். இப்பொழுது தம்முள் ஒருவனாக நெருங்கிவிட்ட அவனைப் பழைய முறையில் வாழ்த்திப் பாடுவது பொருந்தாதோ என்று ஐயுறுகின்றனர். எனவேதான், அவனைப் பாடும் பரிசு எது என்று பிணாப்பிள்ளைகளை வினவுகின்றனர்.