பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 235


இறைவன் திருவருளில் நனையவேண்டும் என்பதைக் கூறினாராயிற்று.

அவனைப் பற்றிப் பேசும் வார்த்தைகள் எவையாக இருத்தல் வேண்டும் என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல, இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் விளையாட்டாகப் படைத்து, காத்து, கரப்பவனைப்பற்றிய வார்த்தைகளாக இருக்க வேண்டும் என்பதையும் கூறினார்.

167. பைம் குவளைக் கார் மலரால் செம் கமலப் பைம் போதால்
அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தம்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எம் கோனும் போன்று இசைந்த
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 13

குருகு-நாரை, வளையல். அரவம்-பாம்பு ஒசை. அங்கம்அவயவம் ; அழகு. பின்னும்-மேலும், பின்னிக்கிடக்கும். மலம் அழுக்கு, ஆணவமலம். சிலம்ப-ஒலிக்க.

சென்ற 165ஆம் பாடலில் 'எமை எய்யாமல் காப்பாய்’ என்று வேண்டினார்கள். எய்யாமல் காக்க வேண்டும் என்று வேண்டுதற்கு உரியு காரணத்தையும் அப்பாடலிலேயே கூறிவிட்டனர். 'வழியடியோம்' என்று கூறிவிட்டமையின் தங்களை எய்யாமல் காக்கவேண்டிய பொறுப்பு அவனுடையதாகும் என்று உறுதிபடக் கூறினர்.

இந்த வேண்டுதலின் பின்னர் அவர்கள் மனநிலையில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருத்தல் வேண்டும். அந்த வளர்ச்சியின் பயனாக எதிரே உள்ள குளத்தைப் புதிய நோக்குடன் காண்கின்றனர். இதுவரையில் முகேரெனப் பாய்ந்து விளையாடுவதற்கு இடமாக இருந்த அக்குளம்,