பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 245


எனின், பின்னர் எவ்வாறு வந்தது என்ற வினாத் தோன்றுமன்றோ? அதற்கு விடையாகத்தான் ஆர் ஒருவர் இவ்வண்ணம் இவளை மாற்றி ஆட்கொண்டார் என்ற வினாவை எழுப்புகிறார்கள்.

பலருடைய மனத்திலும் தோன்றிய இவ்வினாவிற்கு விடை, ஆட்கொண்ட வித்தகர் ஒருவருண்டு என்பதாகும். இப்பெண்ணுக்குக் கிடைத்த வளர்ச்சியை நாமும் பெறவேண்டுமேயானால் அந்த வித்தகனைக் கண்டுபிடித்து அவன் தாள் பணிய வேண்டும் என்று முடிக்கின்றார்கள்.

அப்பெண்ணுக்குக் கிடைத்த அனுபவம் பாடலின் முற்பகுதியில் பேசப்பெறுகிறது. ஒரு முறை எம்பெருமான் என்று சொல்லத் தொடங்கியவள் பிறகு அதை நிறுத்தவேயில்லை. எம்பெருமான் சீர்களை அடுக்கடுக்காகக் கூறிக்கொண்டேயிருக்கின்றாள். இவள் எதிரே நின்று இவள் கூறுவதைக் கேட்டவுடன், ஒன்று நன்றாக விளங்கிவிட்டது. இவளுடைய பொறி, புலன்களில் வாய் தவிர வேறொன்றும் பணிபுரியவில்லை. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற இவளுடைய அந்தக்கரணங்கள் நான்கில் மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும் செயலிழந்துவிட்டன. சித்தம் ஒன்றுமட்டும் விழித்திருக்கிறது. அந்தச் சித்தம் முழுவதும் ஆனந்தம் நிறைந்திருக்கிறது. மகிழ்ச்சி, இன்பம் போன்ற உணர்வுகள் நிலையில்லாதனவாய் மனத்திடைத் தோன்றி மறையும் இயல்புடையன. ஆனால், இவள் சித்தத்தில் ஏற்பட்ட ஆனந்தமோ இறையனுபவத்தில் கிடைத்ததாகலின் நிலைபேறு உடையதாய் அடிமனத்தின் ஆழத்தில் உள்ள சித்தத்தில் நிரம்பி வழிகின்றது என்பதை எதிரே உள்ள பெண்கள் அறிந்திருந்தார்கள் ஆதலின், 'சித்தம் களி கூர’ என்றார்கள்.

அடிமனத்தின் ஆழத்தில் நிறைந்து வழிகின்ற ஆனந்தம் நுண்மையிலும் நுண்மையானது ஆயிற்றே! அதை எப்படி