பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


173. உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் 19

பழஞ்சொல்-பழமொழி. கங்குல் இரவு

இப்பாடலின் முற்பகுதி பொருள் செய்வதற்குச் சற்றுக் கடினமாக உள்ளது என்பது உண்மைதான். 'பழஞ்சொல்’ என்பது பழமொழி என்று இந்தநாட்டில் வழங்கப்படும் சொல்லே ஆகும். அப்படியானால் இங்கு வழங்கப்பெற்ற பழமொழி யாது? 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்பதே அப்பழமொழி ஆகும். ‘கையில் பிள்ளை’ என்பதால் பிள்ளை என்பது மிகச் சிறிய குழவியையே குறிக்கும். ஒருவருடைய கையில், தன்னைத் தான் காத்துக்கொள்ள இயலாத குழவியைக் கொடுத்தால், அந்த விநாடியிலிருந்து அக்குழவியைப் பெற்றுக் கொண்டவர், அதனைக் காக்கும் பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறார் என்பதே பொருளாகும். அப்படிக் குழந்தையைக் கொடுத்த பின்னர், இதனை உம் அடைக்கலப் பொருளாகப் பாதுகாப்பீராக என்று கூறுவது, வேண்டா கூறுவதோடு அன்றி, குழந்தையினை வாங்கிக் கொண்டவரது தரத்தைக் குறைத்து மதிப்பிடுவதும் ஆகும். இவ்வாறு கூறினால், குழந்தையைக் கையில் பெற்றுக் கொண்டவர் என் பொறுப்பு என்ன என்பது எனக்குத் தெரியும்; உன் உபதேசம் தேவையில்லை என்று கூறவும் வாய்ப்புண்டு ஆதலின், அப்பழஞ்சொல்லை மறுபடியும் புதுக்குவதுபோன்று இம்மகளிர் பேசத் தொடங்கியவுடன்