பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 265


மகளிர் முன்னேறாத நாடு முழு முன்னேற்றம் அடையமுடியாது என்ற இற்றைநாள் கண்டுபிடிப்பை அன்றே அறிந்திருந்த அடிகளார், இளமகளிர்க்கு இறையுணர்வை ஊட்டுவதே அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி எனக்கண்டார். அதனை அறிவுரையாகக் கூறாமல், அவர்கள் விளையாடும் விளையாட்டுப் பாடல்களிலேயே இந்த அருங்கருத்தைப் புகுத்தினார். அம்மானை, பொற் சுண்ணம், பொன்னுரசல், எம்பாவை, சாழல், பூவல்லி ஆகியவை மகளிர் விளையாட்டுக்களே என்பது நன்கு விளங்கும்.

என்றாலும், அதில் ஒரு வேற்றுமை உண்டு என்பதை அறிதல் வேண்டும். பருவமடைந்த இள மகளிர் மனத்தில் காதல் உணர்வை வளர்க்க, இப்பாடல்கள் மூலம் பழங்காலத்தார் முயன்றனர். அந்த இளவயதிலேயே அவர்கள் பாடும் பாடல்களைக் கொண்டே அம்மகளிரின் ஆழ்மனத்தில் இறையுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்முதலாக கருதியவர் அடிகளாரே ஆவர்.

விளையாட்டாகப் பாடப்படும் இப்பாடல்கள் தொடக்கத்தில் கருதிய பயனைத் தராவிட்டாலும், நாளாவட்டத்தில் பலமுறை பாடப்படும்போது அவர்கள் மேல் மனத்தைக் கடந்து உள்ளத்தில் சென்று பதியும் என்ற நுணுக்கத்தை அறிந்துகொண்ட அடிகளார், இந்த விளை யாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே பாடல்களை இயற்றினார்.

தொடக்கத்தில் ஆடும்போது இப்பாடல்களின் உட் பொருளை அறிந்து கொண்டே அவர்கள் பாடினார்கள் என்று கூறுவது சரியில்லை. ஆனாலும், பாடல்களின் ஓசை நயம், தாள கதி என்பவை மிகச் சிறப்பாக இப்பாடல்களில் அமைந்திருத்தலின் இவற்றிற்காகவே மீட்டும் மீட்டும்