பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


நெற்றிக் கடவுள் உதவ முன்வரவில்லை. ஏன்? அடிகளார் செய்த தவற்றிற்காக அப்போது தண்டனை அனுபவிக்கிறார். அரசாங்கத்தில் குதிரை வாங்குவதற்காக என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பணத்தை(ear-marked fund) வேறு எவ்வளவு உயர்ந்த காரியத்திற்கு என்றாலும் செலவிடுதல் பிழை. அந்தக் குற்றத்திற்காக முதன்முறை அவர் தண்டனை அனுபவிக்கும்போது ஆலவாய்ச் சொக்கன் தலையிட வில்லை. இந்நாட்டில் இம்மரபு காக்கப்பட்டது என்பதை, பக்த இராமதாஸரின் வரலாறும் நன்கு உணர்த்தும். திருவாதவூரரைப்போலப் பக்த இராமதாஸரும் அரசனுக்குச் சேரவேண்டிய வரிப்பணத்தை இராமனுக்கு அழகிய திருக்கோயில் கட்டுவதற்குச் செலவழித்துவிட்டார். அதற்கெனப் பன்னிரண்டு ஆண்டுகள் சிறை இருந்தார்.

ஆனால், இப்பொழுது குதிரைகள் வந்து பாண்டியன் அதனைப் பெற்றுக்கொண்ட பிறகு மற்றோர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பரிகள் நரியாயின என்றாலும், இப்பொழுது அவை பாண்டியனுடைய சொத்தாகும். குதிரைகளைக் கயிறுமாற்றிப் பெற்றுக்கொண்ட பிறகு அவை நரியாக மாறினாலும் புலியாக மாறினாலும் மணிவாசகர் அதற்குப் பொறுப்பாகார். இதுவே அரச நீதி. இந்த நீதியை மறந்த மன்னன் மறுமுறையும் அடிகளாரைத் தண்டிக்கத் தொடங்கியபோது வைகையில் வெள்ளம் புரண்டது.

அடியார் துயரம் பொறாத ஆலவாயான் அடிகளாரின் துன்பத்தைத் துடைப்பதற்கும், இறையன்பு மேலிட்ட வந்திக்கும், பாண்டியன் வரகுணனுக்கும் காட்சி நல்கவும் மண் சுமக்கும் கூலியாளாய் வந்து சேர்ந்தான்.

திருவாதவூரர், வரகுணன், வந்தி என்ற மூவருக்கும் ஒரே நேரத்தில் அருள் செய்ய ஏற்றுக்கொண்ட வடிவம்,