பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 343


இல்லை என்பதை மட்டும் கண்டுகொண்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சாத்திரங்களில் காணப்பெறும் சில பெயர்களைத் திருவாசகத்தின் பல பகுதிகளுக்குத் தலைப்புகளாகச் சூட்டிவிட்டனர். திருச்சதகத்தில் காணப்பெறும் பல தலைப்புகள் இந்த முறையில் இடம்பெற்றவை; ஆதலின், அவை பொருந்தாது நிற்றலை ஆழ்ந்து நோக்குவார் எளிதில் அறியமுடியும்.

ஆத்தும சுத்தி என்ற தலைப்பும் இப்படி இடம் பெற்ற ஒன்றாகும். இதில் வரும் பத்துப் பாடல்களில் முதல் வரும் ஐந்து பாடல்கள் (35-39) அடிகளார் தம் விருப்பப்படி நடவாத நெஞ்சை நோக்கி நொந்து கூறியனவாகும். இறை அருளில் மூழ்கி ஆடுதல் முதலியவற்றைச் செய்யாத தம் நெஞ்சைப் 'பிண நெஞ்சே' என்று விளிக்கின்றார். இதே கருத்து ஏனைய நான்கு பாடல்களிலும் தொடர்கின்றது.

தம்முடைய நெஞ்சம் திருப்பெருந்துறை அநுபவத்தில் மூழ்கி அதிலேயே தங்கிவிடாமல் வெளியே வந்து தன் விருப்பம் போல் ஆட்டம் போடுவதற்குரிய காரணத்தைச் சிந்திக்கின்றார் அடிகளார். குருநாதரே தம்மை ஒதுக்கி விட்டாரோ என்ற ஐயம் ஒரு விநாடி மனத்தில் தோன்றினாலும், குருநாதர் அவ்வாறு செய்யவில்லை என்ற முடிவுக்கு வருகின்றார். அதனையே, 'வினை என் போல்..'(41) என்று தொடங்கும் பாடலில் ‘தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்று’ என்ற முடிவுக்கு வருகிறார். அவ்வாறானால் குருநாதர் திருவடியை விட்டுப் பிரிந்ததற்குக் காரணம் தம்முடைய கொடிய வினையே என்ற முடிவுக்கு வந்ததால் வினை, என்போல் உடையார் பிறர் யார்?’ என்று பாடுகிறார்.

இனிமையின் எல்லையாக உள்ள குருநாதரைப் பிரிந்து நெடுங்காலம் ஆகிவிட்டதுபோல அவருக்குத் தோன்றுதலின், இன்னும் இந்த உடம்பை வைத்துக் கொண்டு