பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/378

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 367


பொருள்கொள்ள வேண்டும். 'யான்’, ‘உன்னை’ என்ற இரண்டு சொற்களும் 'ஏசினும்' என்ற சொல்லுக்கு முன்னர்க்கூட வந்திருக்கலாம். அவ்வாறு மாற்றிப் பாடியிருந்தாலும் இதே பொருளைத்தான் தரும். அப்படியிருக்க ‘ஏத்தினும்' என்ற சொல்லிற்கு முன்னர் 'யான்' ‘உன்னை' என்ற சொற்களைப் பெய்ததன் நோக்கம் என்ன? ஏசல், ஏத்தல் என்ற இரண்டிலும் ஏசப்படுபவனும் ஏத்தப் படுபவனும் ஒருவனாக இருக்கின்றான்; ஏசுகின்றவரும் ஏத்துகின்றவரும் ஒருவராகவே உள்ளார். எனவே, எதிரே ஒருவன், இப்புறம் ஒருவர் என்ற இருவரைத் தவிர மூன்றாவது ஒருவருக்கு அங்கு இடமே இல்லை.

எதிரே உள்ளவனிடம் குறைகள் இல்லாவிட்டாலும், தமக்கு அவன் ஒன்றும் துயர் செய்யாவிட்டாலும், தம் துயரம் காரணமாக, எதிரே உள்ளவனிடம் இல்லாத குறைகளைச் சொல்லி ஏசுதல் மனித மனத்தின் குறைபாடுகளில் ஒன்றாகும். அவன்பால் குறை ஒன்றும் இல்லை என்று அறிந்தவுடன் தாம் ஏசியது தவறு என்று ஏசியவன் உணர்கின்றான். இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.

அடுத்தபடியாக உள்ள, ஏத்துதலில் எங்கிருந்து பிழை வரும்? யாரோ ஒருவனை ஏத்தினான் என்றால், ஒன்று அவனிடம் உள்ள நற்பண்புகளை ஏத்தி இருக்க வேண்டும். அல்லது வேறு பயன் கருதாது அவனிடம் இல்லாத, காணப்படாத நற்பண்புகளை அவன்மேல் ஏத்திப் புகழ்ந்திருக்கவேண்டும். இதில் எம்முறையில் ஏத்தினாலும் ஏத்துபவன் எப்பிழையும் செய்யவில்லை. எனவே, வருந்த வேண்டிய தேவையும் இல்லை.

ஆனால், அடிகளாரின் பாடல், 'ஏத்தினும் என் பிழைக்கே இரங்கி' என்று தெளிவாகவே உள்ளது. இதனை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் முன்னர் உள்ள இரண்டு சொற்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.