பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/390

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 379


விளக்கவே "நின்னடியார்’ என்றும் 'அன்னவரே எம் கணவர் ஆவார்’ என்றும் அப்பெருமாட்டி கூறினாள்.

இந்த நிலையிலும் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். எவ்வளவுதான் பொறுப்புகளைப் பிரானிடமும் கணவரிடமும் ஒப்படைத்தாலும் இந்த அகங்காரம் என்ற ஒன்று இருக்கின்றவரையில், பிரானும் கணவரும் செய்கின்றவற்றை மகிழ்ச்சியோடும் பொறுப்போடும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஓரளவு குறையத்தான் செய்யும்.

அவர்கள் எவ்வளவு செய்தாலும், 'இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாமே; இதை இப்படிச் செய்யாமல் அப்படிச் செய்திருக்கலாமே என்ற குறைகள் ஆணவத்தில் சிக்குண்ட மனத்திற்கு இருக்கத்தான் செய்யும். ஆணவத்தைப் போக்குதல் என்பது இயலாத காரியம். அந்த ஆணவம் இருக்கின்றவரை இந்தச் சிறு குறைகள் மனத்திடை தோன்றிக்கொண்டே இருக்கும். இந்தச் சிறு குறைகளும் நீங்க வழி என்ன? சமாதிநிலையில் இருந்து வெளிப்பட்ட பெருமாட்டி, தன் அநுபவத்தில் கண்ட எளிய வழியைத் தன் தோழிமார்களுக்கு நேரடியாகவும், நம் போன்றவர்களுக்கு மறைமுகமாகவும் இதோ கூறுகின்றாள்.

தலைவன் என்றோ கணவன் என்றோ இறைவனையும், ஒரு மனிதனையும் முழு மனத்துடன் ஏற்றுக்கொண்ட பிறகு, என்ன செய்யவேண்டும்? 'அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்’ என்பதே அந்த எளிய வழியாகும். கவிதை ஆதலின் சொற்கள் முன்பின் மாறி அமைந்துள்ளன. சொற்களை மாற்றி 'அவர் சொன்னபரிசே தொழும்பாய் உகந்து பணிசெய்வோம்’ என்ற முறையில் அமைத்துக் கொண்டால், பொருள் எளிதாக விளங்கும். அவர்கள் எந்தக் கட்டளை இட்டாலும் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுப் பணி செய்யத் தொடங்கிவிட்டால், ஆணவத்தின் பேயாட்டம் அங்கு இல்லாமல் அடங்கிவிடும். அத்தகைய மன நிறைவு