பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



ஒரு மனிதரைத் தூரத்தில் காணுவோமேயானால் அவருடைய பருவடிவம் மட்டுமே முதலில் தோன்றும்; இன்னும் சற்று நெருங்கிச் சென்றால் அவருடைய உறுப்புக்கள் தோன்றும்; மேலும் சிறிது நெருங்கிச் சென்றால் அவருடைய நிறம் தோன்றும்; இது மனிதக் காட்சியின் இயல்பாகும்.

இதன் மறுதலையாக இறைக்காட்சியில் முதலில் தெரிவது நிறமே ஆகும். அதனை ஒளி என்று கூறுவர். அதன் பிறகே வடிவு தோன்றும். குருவை மனிதரென்று கருதியிருந்தால் வடிவுதான் முதலில் தெரிந்திருக்குமே தவிர வண்ணம் தெரிய நியாயமில்லை. ஒளி வடிவை முதலில் கண்டாராதலின் வண்ணந்தான் அது காட்டி, வடிவு காட்டி, மலர்க்கழல்கள் அவை காட்டி’ என்று வரிசைப்படுத்திக் கூறுகிறார்.

மனிதக் காட்சிக்கும் இறைக் காட்சிக்கும் உள்ள வேறுபாட்டைப் பாடலின் மேலே கூறிய பகுதி நன்கு விளக்குகின்றது. இக்கருத்தை முதலில் கூறியவர் ‘பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியார் அவர்களாவார்.

30. சிந்தனை நின் தனக்கு ஆக்கி நாயினேன்தன்

கண் இணை நின் திருப்பாஆதப் போதுக்கு ஆக்கி

வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்

மணி வார்த்தைக்கு ஆக்கி ஐம் புலன்கள் ஆர

வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை

மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்

தந்தனை செம்தாமரைக் காடு அனைய மேனித்

தனிச்சுடரே இரண்டும் இல் இத் தனியனேற்கே 26

வந்தனை-வழிபாடு வார்த்தை-அழகியவார்த்தை. வந்தனை-வந்தனையாய், முற்றெச்சம். விச்சை-வித்தை. மாலமுதம்- தன்னையன்றி வேறொன்றையும் விரும்பச் செய்யாமை