பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 69


தூண்டுகிறது. குருவை இவர் கண்டது உண்மை. ‘கண்ணால் யானும் கண்டேன் காண்க' (திருவாச:3.58) என்று முன்னரே கூறியுள்ளார். அப்படியிருக்க, ‘என் உள்ளக் கருவை நான் கண்டிலேன்’ என்று கூறுவது, உள்ளத்தின் ஆழத்தில் உயிர்க்குயிராய் மறைந்து நிற்கும் ஒருவனைக் கண்டிலேன் என்று கூறுவது, என்ன பொருளைக் கருதிக் கூறப்பெற்றது?

புறத்தே பருவடிவுடன் இருந்த குருவைப் புறக் கண்களால் கண்டது உண்மை. மானிட வடிவுடன் இருந்த அவர் உண்மையில் யார் என்பதை அடிகளாரின் உள்ளுணர்வு உணர்த்தியது. என்றால், கண்களால் கண்டது மானிட உடலை கண்ணின் பார்வை எல்லைக்கு அப்பாற்பட்டுக் கருத்தளவில் இருக்கும் ஒருவனை உணரலாமே தவிர, அனுபவிக்கலாமே தவிர, கண்ணால் காண முடியாது என்பது உண்மை. 'உள்ளக் கருவை யான் கண்டிலேன்’ என்று சொல்லும்பொழுது, ‘புறத்தே பருவடிவுடன் இருந்த குருவைக் கண்டேன்; அவரே ஆழ்மனத்தின் அடியில் நுண்மையாய் நிற்கும்போது கண்ணால் அவரைக் காணமுடியவில்லை' என்பது பொருளாகும்.

புறத்தே இருந்த ஒருவர் 'வருக' எனக் கூஉய் ஆட்கொண்டு, திருவடி தீட்சை செய்து அமுத தாரைகளை என்புத் துளைதொறும் ஏற்றினார். 'அப்படி மாபெரும் உபகாரம் செய்த ஒருவருக்கு நான் என்ன கைம்மாறு செய்தேன்? இரு கை யானையை ஒத்திருந்தவனாகிய நான் பொறி, புல இன்பங்களை நுகர்வதையே பெரிதாகக் கருதி இருந்துவிட்டேன்’ என்கிறார்.

இங்கு அடிகளார் தம்மை யானையோடு உவமித்தது ஒரு நுண்மையான உட்கருத்தைக் கொண்டதாகும். ஒரு கை யானைக்கே இரண்டு கெட்ட குணங்கள் உண்டு. ஒன்று - நன்றி மறப்பது; இரண்டு - குளித்துவிட்டுத்