பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 73


அப்பொருள் அடிகளாரின் கட்புலனுக்கும் விருந்தாகத் தோற்றிற்று என்பது அறியப்படும். எனவே, குருவடிவாக வந்ததையே அடிகளார். இங்கும் பேசுகிறார்.

நான்காவது அடி நன்கு சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். முரண்பட்ட இரு கருத்துக்களை அடுத்தடுத்த சொற்களால் அடிகளார். பேசுகின்றார். கண்டும் கண்டிலேன் என்றால் என்ன பொருள்? இரண்டும் உண்மையானவை. மானிட வடிவுடன் இருந்தக் குருவை கண்டது உண்மை. தீட்சை பெற்ற பிறகு அனுபவத்தில் மூழ்கி எழுகின்ற நிலையில் மானுட வடிவுடன் இருந்த குரு, உண்மையில் யார் என்ற சிந்தனை தோன்றிற்று. மறுபடியும் கண்களால் அவரைக் கண்டு ஒரு முடிவிற்குவர விழைந்த அடிகளார், மூடியிருந்த கண்களைத் திறந்து காணும்போது அங்கே குரு இல்லை. எனவே, கண்டும் என்றும் கண்டிலேன் என்றும் சொல்வது உண்மையானவையாம்.

எங்கும், எப்பொழுதும் இடையீடின்றி நிற்கும் ஒரு பொருளை, மறைந்துவிட்டார் என்று சொல்ல விரும்பாத அடிகளார், இப்பொழுது அவரைக் காணமுடியாமைக்குக் காரணம் தம் குறையே என்ற கருத்தில் ‘கண்டிலேன் என்ன கண் மாயமே' என்று பாடுகிறார். காணாமைக்குக் காரணம், அவர் எங்கும் போய்விடவில்லை என்றாலும் என்ன மாயத்தாலோ கண் அவரைக் காணும் ஆற்றலை இழந்துவிட்டது என்கிறார்.

காட்சிப் புலனுக்குக் கிடைக்கக்கூடிய எந்த வடிவும், அஃறிணையில், நிலையியல் பொருளாக இருந்தாலன்றி ஏனையவற்றை ஆண் பெண் என்று பிரித்துக் காண முடியும். இந்தப் பிரிவினைக் காட்சிக்கு அடிப்படையாக இருப்பது அறிவாகும். ஆகவே, அறிவின் துணை கொண்டு காணமுயன்றால் பெண், ஆண், அலி என்று பிரித்துக் கண்டுகொள்ள முடியாத பொருள் என்று கூறிவிட்ட பிறகு ‘தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்’ என்று