பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூவல்லி 155 யும் சென்று ஆராயும் இயல்புடையது புத்தி. ஆதலால், அந்தப் புத்தியினிடம் எந்த ஒன்றும் புகுந்து தங்கமுடியாது. இது புத்தியின் இலக்கணம். ஆனால், இந்த இலக்கணத்தை மீறக்கூடியவன் ஒருவனுண்டு. அவன் ஒருவனே புத்தியினுள் புகமுடியும். அதனையே அடிகளார் ‘புத்தி புகுந்தவா என்று பாடுகிறார். தன் நிலையை விட்டு நீங்கி, பொருளினிடம் சென்று அதுபற்றி ஆராயும் இயல்புடையது புத்தி பொருள்களை ஆராயும் புத்தியின் உள்ளேயே ஒருவன் புகுந்துவிட்டான் என்றால், அந்த மனிதனுடைய நான்கு அந்தக்கரணங்களில் மூன்று அவன் வசமில்லாமல் நழுவிவிட்டது என்பது பொருளாகும். எஞ்சியிருப்பது அகங்காரம் என்ற ஒன்றேயாம். சாதாரணமாக இறுதிவரையில் தன் தனித்தன்மையை இழக்காத இந்த அகங்க்ாரம், இதுவரை தன் ஆணைக்கு உட்பட்டுப் பணி செய்த மனம், சித்தம், புத்தியாகிய மூன்றும் இப்பொழுது வேறு ஒருவருடைய ஆதிக்கத்தின்கீழ்ச் சென்றுவிட்டமையின் சிறகிழந்த பறவையாகச் செயலற்றுக் கிடக்க நேரிடுகிறது. அடியார்கள் என்பவர்கள் மணிவாசகரைப் போல, கண்ணப்பரைப் போல அதீத நிலைக்குச் சென்றவுடன் இந்த அந்தக்கரணங்கள் நான்கும், தமக்கென்று தனிச் செயல்கள் எதுவுமில்லாமல் இறையனுபவத்துள்ளே மூழ்கி விடுகின்றன. இந்த அதீத நிலையை அடைவதற்குத் தொடக்கம், மனமும் சித்தமும்போல, புத்தியும் அவ்வழிப் படுதலாகும்.