பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 9 அடியவர்கள் என்று பொருள் கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. காரணம், நேசமில்லா அடியவர்கள் என்பது பொருந்தாக் கூற்றாகும். அடியவர்கள் என்ற சொல்லே இறையன்பில் தலைநின்றவர்கள் என்ற பொருளைத் தரும். எனவே, நேசமுடைய என்ற சொல் வேறொரு பொருளைக் குறிக்கின்றது என்பதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம். உண்மையான இறையன்பு உடையவர்கள் தங்கள் சமயத்தவர், தங்களுக்கு வேண்டியவர் என்ற சிறிய கூட்டிற்குள் அகப்படாமல் இறைவனால் படைக்கப்பெற்ற ஓரறிவு உயிர்முதல் ஆறறிவு உயிர்வரை உள்ள எல்லா உயிர்களையும் நேசிப்பவர்கள் ஆவார்கள். இவ்வுயிர்களை யெல்லாம் நிறை சேரப் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய்' அங்கங்கே இறைவன் நிற்கின்றான். ஆதலின் இப் பெருமக்கள் எல்லா உயிர்களையும் நேசிக்கின்றனர் என்க. இதன் எதிராக, தத்தம் சமயமே உயர்ந்தது என்ற குறுகிய நோக்கத்துடன் இருப்பவர்கள் தம் சமயத்துள் சேராத பிற உயிர்களை நேசிக்கமாட்டார்கள். ஆதலால்தான், இவர்களை விலக்கி நேசமுடைய அடியவர்கள் என்றார் அடிகளார். இத்தகைய பெருமக்கள் உலகம் முழுவதும் நிறைந்து நிலைத்து வாழ்ந்தால் உலகம் உய்கதி அடையும். மிகப் பரந்துபட்ட மனநிலையில் நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக’ என்று அடிகளார் வாழ்த்துகிறார். இதனை அடுத்து நிற்கும் தொடர் தேசமெல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திருவேகம்பன் செம்பொன் கோயில் பாடி என்பதாகும். இத்தொடரில் கச்சி (காஞ்சி) மாநகருக்கு அடிகளார் கொடுத்த அடை, வரலாற்று அடிப்படையில் அமைந்ததாகும். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாவரசர் பெருமான் கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர்’ (திருமுறை 4:43.8 என்றார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடிகளார் தேசமெல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி என்றார்.