பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 படித்தால் காலை எந்தெந்த இடங்களில் ஊன்றி உந்த வேண்டும் என்பது நன்கு தெரியும். ஒருமுறை உந்தி ஆடத் தொடங்கியவுடன், குறிப்பிட்ட நேரத்தில் அடுத்த உந்துதல் வந்தாலொழிய, ஊஞ்சலின் ஆட்டம் தறிகெட்டுவிடும். மேலே கூறிய முறையில் அழுத்தம் வரும் இடங்களில், காலை உந்தி ஆடினால் ஊஞ்சலின் ஆட்டம் ஒரே சீராக அமையும். இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்து அதற்கேற்ற தாள கதியோடு ஒரு சந்தம் அமைத்துப் பாடியுள்ள அடிகளாரின் நுண்மாண் நுழைபுலம் அறிந்து போற்றற்குரியதாகும். பொற்சுண்ணத்திற்கு அடுத்தபடி, ஒரு குறிப்பிட்ட தாள கதியில் அமைந்துள்ள பகுதி பொன்னுரசல் ஆகும். இறையனுபவத்தை அப்படியே பிழிந்து தரும் ஏனைய திருவாசகப் பாடல்களிலிருந்து பொற்சுண்ணம், சாழல், உந்தியார், பொன்னுரசல் போன்றவைகள் சற்று மாறுபட்டவை ஆகும். இவைபற்றி மேலும் சிந்திப்பது நலம். இந்த ஒன்பது பாடல்களிலும் திருஉத்தர கோசமங்கை பேசப்படுதலின் திருப்பொன்னுரசல் இவ்வூரிலேயே பாடப்பெற்றது என்று நினைப்பதில் தவறில்லை. அருட்சுத்தி என்ற தொடர் அருளினது தூய்மை எனப் பொருள்பட்டு, பொருள் விளக்கமுறாமல் நிற்கின்றது. சுத்தி உடைய அருள் என்றால், சுத்தி இல்லாத அருளும் உண்டோ என்ற பல வினாக்களுக்கு இடம் தந்து குழப்பத்தை உண்டாக்குவதலின், இந்த உட் தலைப்பு பொருந்தாமை அறிக. 329. சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து நாராயணன் அறியா நாள் மலர்த் தாள் நாய் அடியேற்கு ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை