பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழாப் பத்து 93 ஆண்ட நீ அருளிலையானால் வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே { இப்பாடலில் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே' என்று வருவது, இப்பிரபஞ்சம் முழுவதும் விரிந்து, அதற்கு அப்பாலும் விரிந்துள்ளவனே என்ற பொருளைத் தரும், இறைவனுக்குரிய இந்த இயல்பை இதற்கு முன்னரும் பல முறை அடிகளார் கூறியுள்ளா ரேனும் இப்பாடலில் மறுபடியும் அதனை நினைவு கூர்வதற்கு இன்றியமையாத காரணம் ஒன்று உண்டு. ஆரொடு நோகேன், ஆர்க்கு எடுத்து உரைக்கேன் என வரும் தொடர்கள் பரந்த எம் பரனே என்பதோடு வைத்து எண்ணப்படவேண்டும். பிரபஞ்சம் முழுவதும் அதற்கு அப்பாலும் ஒரே ஒருவன்தான். பரந்தும், விரிந்தும், ஊடுருவியும், தனித்தும், உள்ளும் புறமுமாக ஒளித்தும் வெளிப்பட்டும் உள்ளான் என்றால், வேறு யாரிடம் சொல்லமுடியும்? அவனையன்றி வேறு யாரும் இல்லையே! அப்படியிருக்க யாரிடம் சென்று முறையிடுவது? தம் குறையை வெளியிட அவ்வொருவனைத் தவிர வேறு யாருமில்லை ஆதலால், ஆரொடு நோகேன், ஆர்க்கு எடுத்து உரைக்கேன் என்ற தொடர்கள் அவருடைய உள்ளத்தில் தோன்றிய மிகப் பெரிய ஆதங்கத்தை, துயரத்தை வெளியிடும் தொடர்களாக அமைந்துள்ளன. அவன் பரந்தும் விரிந்தும் இருக்கலாம். அதற்காக இவரை ஆட்கொள்ளவேண்டுமா என்ன? இப்படி ஒரு வினாத் தோன்றுமேயானால் அதற்கு விடையாக அமைவதுதான் ஆண்ட நீ அருளிலையானால் என்பது. 'உன்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லையாதலால் யாரிடமும் என் துயரத்தைச் சொல்ல வாய்ப்பில்லை.