பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 145 அந்தச் சிவத்துக்கு உரிய சில இயல்புகள் இவர்மாட்டும் தோன்றியிருக்க வேண்டும். சிவம் முக்காலங்களையும் கடந்தது ஆதலின் முக்காலங்களையும் அறியும் வாய்ப்பை அடிகளாரும் பெற்றிருத்தல் வேண்டும். ‘நான் ஆர்? என் உள்ளம் ஆர்?’ என்ற பாடலைப் பாடும்போது இந்தப் புதிய கண்டுபிடிப்பு நிகழவில்லை போலும் என்று எண்ணத் தோன்றுகிறது. பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பின்னர், இறந்த காலத்தையும், தம்முடைய ஆன்ம யாத்திரையின் தொடக்கத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அடிகளாருக்கு ஏற்பட்டிருத்தல் வேண்டும். அம்முறையில் கண்டதைத்தான் இப்பாடலில் பேசுகிறார். பொதுவாக எல்லா உயிர்களுக்கும் ஓர் உடம்பைத் தந்து அவ்வுடம்பினுள் உயிர் உறையுமாறு செய்தவன் இறைவன். அந்த உயிருக்கு உயிராய் அங்கங்கே தங்கியுள்ளான் என்று கூறுவது காழிப் பிள்ளையார் பாடல்களில் பெரிதும் காணப்படும் ஒன்றாகும். ஆனால், உருத்தெரியாக் காலத்திலேயே, அதாவது சுக்கில சுரோணிதம் கலந்து ஒரு வடிவத்தைப் பெறுகின்ற காலத்திற்கு முன்னரேகூட, இறைவன் அந்தத் தனி உயிரணுவுள் புகுந்தான் என்கிறார் அடிகளார். ஒரு மாபெரும் மெய்ஞ்ஞானி என்பதால் இன்றைய விஞ்ஞானிகள் கண்ட காட்சி அன்றே அவருக்கு எளிதாகக் கிட்டியிருக்க கூடும். ஆனால், கரு உருப்பெறுவதற்கு முன்னரே அதனுள் இறைவன் புகுந்திருப்பதைக் காணும் ஆற்றல் விஞ்ஞானத்திற்கு இல்லை. எனவே, அடிகளார் திருப்பெருந்துறையில் பெற்ற திருவருள் காரணமாக இதனைக் கண்டு கூறினார் என்று நினைப்பதில் தவறில்லை.