பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 161 வெயில் படாமல் நிழலிலுள்ள செடி வளர்ச்சி குன்றி, வளைந்துபோகும் நிலையை மாற்ற வேண்டுமானால் சூரிய ஒளி அதன்மேல் படுமாறு செய்ய வேண்டும். அதேபோல இடர் புகுந்து நின்ற நிலையில் வாழும் அடிகளாருக்கு உலவா இன்பச் சுடராகிய ஒளி வேண்டும். அது எது? இன்பச் சுடர் என்பதை ஒருமையாக வைத்துக் கொண்டாலும், ஒளி, எங்கும் நிறைந்து பன்மைப் பொருளாய் விரிவதுபோல, உலவாச் சுடர் என்ற ஒருமை, குருநாதரையும், அடியார் கூட்டத்தையும் ஒருங்கே குறித்து நின்றது. அவர் விரும்பியபொழுது இவை இரண்டுமே கிட்டாததால் அலமந்து அலந்து) நிற்கின்றேன் என்கிறார். இப்பொழுது அடிகளாருடைய ஆர்வமெல்லாம் குருநாதரையும் அடியார் கூட்டத்தையும் இன்பச் சுடரை) அடைந்து அதனுள் கலந்துவிட வேண்டும் என்பதாகும். மனித மனத்தின் விசித்திரமான செயல்களில் ஒன்று, பயனைப் பெற்றபிறகு பெற்ற வழியை மறந்துவிடுதலாகும். இப்பொழுது அடியாரொடு கலந்து நில்லாமையால் கலக்க வேண்டும் என்ற ஆர்வம் தலைதுாக்கி நிற்கின்றது. ஒருவேளை கலந்துவிட்டால் அதிலேயே நிலைக்க வேண்டும் என்ற ஆர்வம் குறைந்துபோதல் இயல்புதானே! ஆர்வம் என்பது வழி, கலந்து நிற்றல் என்பது பயன். பயனை அடைந்த பிறகு வழியை மறத்தல் மனித மனத்தின் இயல்பன்றோ அதனை நன்கு அறிந்த அடிகளார் இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்பொழுதே இரண்டையும் வேண்டிக்கொள்கிறார். ஒன்று, அடியார் கூட்டத்தின் இடையே இருத்தல்; இரண்டு, இருக்கவேண்டும் என்ற ஆர்வம் மேலும் மேலும் வளர்தல், அவ்வாறு வளர்தலையே ஆர்வம் கூர என்றார்.