பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிருண்ணிப் பத்து 235 அடுத்துள்ளது 'புறம்போகல் ஒட்டேன்’ என்பதாகும். இத்தொடருக்குத் திருநாவுக்கரசப் பெருமானின் புழுவாய்ப் பிறக்கினும் என்ற பாடலில் வரும் 'உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தர வேண்டும்’ (திருமுறை:4-948) என்ற தொடரை நினைவிற்கொண்டு உன் திருவடிகள் என்னைவிட்டு நீங்கிச் செல்ல ஒருநாளும் இடம்கொடுக்க மாட்டேன் என்று பொருள் கூறியுள்ளனர். இத்தொடருக்கு மற்றொரு பொருளையும் சிந்திக்கலாம். ஐயனே! உன் திருவருளை முழுவதுமாகப் பெற்றேன். எனினும், நீ என்னுள் நிறைந்துள்ளாய் எனினும் மனித உடலோடு வாழும் காரணத்தால் என் மனம் முதலியவை உன்னைவிட்டு நீங்கி புறம்போகத் தொடங்கினால் அவற்றை அவ்வாறு போக விடமாட்டேன் என்பதாம். இனி போகல் ஒட்டேன் என்பதற்குச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது நீயே (திருவாச:536) என்பனபோன்ற தொடர்களை மனத்துட் கொண்டு ஐயனே! (யான்) புறம்போகேன். ஒருவேளை என்னிடம் தங்க விருப்பமின்றி என்னைவிட்டுப் போக நீ விரும்பினால் உன்னைப் போகவிடமாட்டேன் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு பொருள் கூறுவதில் தன்முனைப்பு உள்ளவர்கள் கூறும் சொற்கள்போன்று இவை அமைந்துள்ளனவே! அடிகளாருக்கு இது பொருந்துமா? என்ற ஐயுறுவார்க்கு ஒரு வார்த்தை இவ்வாறு கூறுவதைத் தற்போதம் என்றால் வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்' என்பன போன்று வருபவையும் தன்முனைப்பு ஆகிவிடும்.