பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாண்டிப் பதிகம் 253 வீடுபேறு அளித்தமையை அறிவிப்பதாகும். 'அமுது என்ற சொல்லால் நிலையான வாழ்வை, வீடுபேற்றை நினைவுறுத் தினார் ஆயிற்று. முன்னர்ப் போற்றித் திருவகவலில் 'நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி (திருவாச:4-218.214) என்று கூறியுள்ளார். ஆதலின், இங்குக் கூறியதும் அக்கருத்தை வலியுறுத்தவேயாகும். பாண்டியற்கு என்று ஒருமையாகக் கூறியமையின் பாண்டிய மன்னர் அனைவரையும் குறிக்காமல் வரகுணன் ஒருவனையே இது குறிப்பதாயிற்று. ‘ஒருவரை, ஒன்றும் இலாதவரை என்று அடுத்தடுத்துக் கூறியுள்ளது சிந்திப்பதற்கு உரியது. ஒருவரை என்பதற்கு ஒப்பற்றவரை என்று பொருள் கூறுவது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. 'ஏகம் சத்' என்று சொல்லப்படும் ஒருவனுக்கு ஒப்புமை இல்லாதவன் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? அவனோ ஒருவன்; அவனையன்றி வேறு எதுவும் இல்லை. அப்படியானால் ஒப்பிடுவதற்கு இரண்டாவது ஒரு பொருள் இல்லாதபோது ஒப்புமை இல்லாதவன் என்று சொல்வது பொருந்துமாறில்லை. - அடிகளார் கூறிய ஒருவரை ஒன்றும் இலாதவரை என்ற தொடருக்கு, வேறு விதமாகப் பொருள் கொள்ள வேண்டும். ஒருவர் என்று கூறும்போது அந்தச் சுட்டுக்குரிய ஒருவர் வடிவு, உருவு, குணங்குறி உடையவராக இருப்பது ஒருதலை. அப்படிப்பட்ட ஒருவரை ஒன்றும் இல்லாதவர்' என்று அடுத்துக் குறிப்பது எப்படிப் பொருந்தும்? ஒன்றும் இல்லாதவர் என்ற சொல் மேலே கூறிய வடிவு, உருவு, குணம், குறி ஆகிய எதுவும் இல்லாதவர் என்பதையே குறிக்கும். வேறு வகையாகக் கூறினால், குணம், குறி, முதலிய ஒன்றும் இல்லாத ஒருவர்